வடலூர் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் தங்களுக்கான ஊதிய உயர்வை வலியுறுத்தி கடந்த இரு தினங்களாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், குப்பைகளை அகற்றும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், வடலூர் பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த 47 பேர் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்குத் தொகுப்பூதியமாக ரூ.6,200 வழங்கப்படுகிறது. இந்த நிலையில் குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்குக் கடந்த மாதம் முதல் தொகுப்பூதியமாக ரூ.9,600 வழங்கப்படுகிறது. இதையறிந்த வடலூர் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள், தங்களுக்கும் உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்குமாறு வலியுறுத்தினர்.
எனினும் இதுவரை உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்படாததால் தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் கடந்த இரு தினங்களாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வடலூரின் அனைத்து வார்டுகளிலும் குப்பை அள்ளும் பணி, வடிகால் தூர்வாரும் பணி உள்ளிட்டவை தடைப்பட்டுள்ளன.
உள்ளிருப்புப் போராட்டம் குறித்து வடலூர் பேரூராட்சியின் செயல் இயக்குநர் பொறுப்பு வகிக்கும் சீனுவாசனிடம் கேட்டபோது, ''இப்பிரச்சனை தொடர்பாகப் பேரூராட்சிகள் செயல் இயக்குனரிடம் தெரிவித்துள்ளோம். அவர் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்றார்.
இது தொடர்பாகத் தூய்மைப் பணியாளர்கள் நலச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராஜேந்திரனிடம் கேட்டபோது, ''மாவட்ட ஆட்சியர் தூய்மைப் பணியாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.355 வீதம் 26 நாட்களுக்கு வழங்கப்படும் என்றார். ஆனால், ஒப்பந்ததாரர்கள் அந்தத் தொகையை வழங்குவதில்லை. இது தவிர தூய்மைப் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்குவதில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்'' என்றார்.