சிவகங்கையில் 4 முறை ஒத்திவைக்கப்பட்ட மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 11 மணி அளவில் தேர்தல் தொடங்கியது.
சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதனன் ரெட்டி முன்னிலையில் தேர்தல் நடைபெறுகிறது. தலைவர் பதவிக்கு காலையிலும், துணைத் தலைவர் பதவிக்கு மாலையிலும் தேர்தல் நடக்கிறது.
சிவகங்கை மாவட்டத்தில் மொத்தமுள்ள 16 மாவட்ட ஊராட்சி வார்டுகளில், அதிமுக. கூட்டணி 8 இடங்களிலும், திமுக. கூட்டணி 8 இடங்களில் (திமுக. 5, காங்கிரஸ் 2, இந்திய ஜனநாயகக் கட்சி 1) வென்றன. அதிமுக., திமுக கூட்டணி சமபலத்தில் இருந்ததால் தலைவர், துணைத் தலைவர் தேர்தலில் இழுபறி ஏற்பட்டது.
மூன்று முறை தேர்தலுக்கு ஏற்பாடு செயப்பட்டது. கடந்த ஜன. 11, ஜன. 30 மற்றும் மார்ச் 4 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் தேர்தலை அதிமுக கவுன்சிலர்கள் புறக்கணித்தனர். இதனால், பெரும்பான்மை இல்லாமல் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து, அதிருப்தி அடைந்த மாவட்ட கவுன்சிலர்கள் சிலர் தேர்தலை நடத்த வலியுறுத்தி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது இருவாரத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
தேர்தலுக்கு வந்த அதிமுக கவுன்சிலர்கள்
தேர்தலுக்கு வந்த திமுக கவுன்சிலர்கள்
கடந்த டிசம்பர் 4-ம் தேதி சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
ஆனால், அன்றைய தினம் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதல்வர் சிவகங்கை வந்ததால் தேர்தல் 4-வது முறையாக ஒத்திவைக்கபட்டது
இந்நிலையில், 4 முறை ஒத்திவைக்கப்பட்ட மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தல் இன்று நடக்கிறது. இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் 1-வது வார்டு கவுன்சிலர் பொன்மணி பாஸ்கரனும், திமுக சார்பில் 7-வது வார்டு கவுன்சிலர் செந்தில்குமாரும் போட்டியிடுகின்றனர்.
தேர்தலையொட்டி ஆட்சியர் அலுலவகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.