உயிர்பயம் கொண்டவர்கள் இன்றைக்கு வாக்குகளுக்காக மட்டும் வெளியே வருவது மிகப்பெரிய சந்தர்ப்பவாதம் என, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
கவிஞர் பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (டிச. 11) சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன்பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:
"மக்களைக் காப்பாற்றுகின்ற, மக்களோடு மக்களாக இருக்கின்றவர்கள்தான் தலைவர்களாக அங்கீகரிக்கப்படுகின்றனர். எம்ஜிஆர்-ஜெயலலிதா போன்றவர்கள் திமுக ஆட்சிக்காலத்தில் மேடையில் ஏறிக்கூட பேச முடியாத சூழல் இருந்தது. சோடா பாட்டில் வீச்சு, கற்கள் வீச்சு போன்றவை நடக்கும். அவ்வளவு தாக்குதல்களையும் தாண்டி எம்ஜிஆர் எத்தனை தடங்கல்கள், துன்பங்கள் வந்தாலும், நினைத்ததை சாதிப்பேன், திமுகவுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன் என்பதை சூளுரையாக கொண்டிருந்தார்.
கற்கள் வீச்சு, சோடா பாட்டில் வீச்சு ஆகியவை குறித்து எம்ஜிஆர் சொல்லும்போது, நாம் உயிரைப்பற்றி கவலைகொள்ளக் கூடாது என்றார். எவ்வளவோ தடங்கல்களைத் தாண்டி நல்லாட்சியை எம்ஜிஆர் நிறுவினார். ஜெயலலிதாவும் அப்படித்தான். பல இன்னல்களை தாண்டி வந்தார்.
தலைவர்களுக்கு அச்சுறுத்தல், உயிர் பயம் இருக்கக்கூடாது. ஆனால், 8 மாதம் வீட்டிலே இருந்துவிட்டு வெளியே வராமல், வாக்குகளுக்காக வெளியில் வருகிறார்கள் என்று சொன்னால், இது எப்படிப்பட்ட சந்தர்ப்பவாதம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இந்த 8 மாதங்களில் முதல்வர் பழனிசாமி உயிரை பணயம் வைத்து பணியாற்றினார். நானும் சென்னையில் பல இடங்களில் கோவிட் ஆய்வு செய்தேன்., ஆனால், கமல்ஹாசன் வெளியில் வந்தாரா? உயிர்பயம் கொண்டவர்கள் இன்றைக்கு வாக்குகளுக்காக மட்டும் வெளியே வருவது மிகப்பெரிய சந்தர்ப்பவாதம்".
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.