தமிழகம்

‘நமக்கு நாமே’ விடியல் மீட்பு பயணம்: அக்டோபர் 26-ல் மூன்றாம் கட்ட பயணத்தை சேலத்தில் தொடங்குகிறார் ஸ்டாலின்

எம்.சரவணன்

'நமக்கு நாமே' விடியல் மீட்பு பயணம் மேற்கொண்டுள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நவம்பர் 4, 5 ஆகிய தேதிகளில் மக்களை சந்திக்க உள்ளார். குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள், மீனவர் பகுதிகளுக்கு செல்லவும் திட்டமிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ‘நமக்கு நாமே - விடியல் மீட்புப் பயணம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் ஸ்டாலின் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். கடந்த செப்டம்பர் 20-ம் தேதி நாகர்கோவிலில் முதல்கட்ட பயணத்தை தொடங்கிய அவர், அக்டோபர் 2-ம் தேதி திருச்சியில் நிறைவு செய்தார். மொத்தம் 11 மாவட்டங்களில் உள்ள 74 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3,750 கி.மீ. பயணம் செய்துள்ளார்.

தனது 2-ம் கட்ட பயணத்தை கடந்த 7-ம் தேதி நீலகிரியில் தொடங்கிய ஸ்டாலின், கடலூரில் இன்று (18-ம் தேதி) நிறைவு செய்கிறார். இந்த பயணத்தின்போது மாணவர்கள், சுயஉதவிக் குழு பெண்கள், விவசாயிகள், வெளிமாநிலத்தவர்கள், தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி வருகிறார்.

அனைத்து மதத்தினரையும் சந்தித்து குறைகளை கேட்கிறார். முதல்கட்ட பயணத்தின்போது திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் குடும்பத்தினருடன் வழிபட்டார். அதுபோல 2-வது கட்ட பயணத்தின்போது, தஞ்சாவூரில் பட்டாச்சாரியார்கள், குருக்கள், அர்ச்சகர்களை சந்தித்து உரையாடினார்.

இதுகுறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்த ஸ்டாலின், ‘‘திமுக இந்து எதிர்ப்பு இயக்கம் அல்ல. திமுகவில் 90 சதவீதம் பேர் இந்துக்கள் உள்ளனர். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கொள்கையை பின்பற்றி வருகிறோம். எனது பயணத்தின்போது இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம், சமணம் என அனைத்து மதத்தினரையும் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு வருகிறேன். எனவே, நான் கோயிலுக்கு சென்றதில் தவறில்லை’’ என்றார்.

‘நமக்கு நாமே’ பயணத்தின் இறுதிகட்ட பயணத்தை வரும் 26-ம் தேதி சேலத்தில் தொடங்கி தீபாவளிக்கு முன்பாக காஞ்சிபுரத்தில் நிறைவு செய்கிறார். இதுகுறித்து திமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘நவம்பர் 4, 5 ஆகிய தேதிகளில் சென்னையில் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஸ்டாலின் செல்ல இருக்கிறார். குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், மீனவர் பகுதிகள், வெளிமாநிலத்தவர்கள், தொழிலதிபர்கள், கடற்கரையில் நடைபயிற்சி செல்வோர், அனைத்து மத பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினருடன் ஸ்டாலின் கலந்துரையாட ஏற்பாடுகளை செய்து வருகிறோம்’’ என்றனர்.

SCROLL FOR NEXT