தமிழகம்

‘தமிழகம் மீட்போம்' என்ற தலைப்பில் 3-வது கட்டமாக ராமநாதபுரத்தில் ஸ்டாலின் நாளை காணொலி பிரச்சாரம் தொடக்கம்

செய்திப்பிரிவு

‘தமிழகம் மீட்போம்' என்ற தலைப்பிலான 3-வது கட்ட காணொலி காட்சி தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரத்தில் நாளை தொடங்குகிறார்.

இதுதொடர்பாக திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

‘தமிழகம் மீட்போம்' என்ற தலைப்பில் காணொலி காட்சி பிரச்சாரப் பொதுக்கூட்டத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த நவம்பர் 1-ம் தேதி ஈரோட்டில் தொடங்கினார். இரு கட்டங்களாக புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி, வேலூர், நீலகிரி, மதுரை, விழுப்புரம், தருமபுரி, சேலம், திருநெல்வேலி, தென்காசி, திருப்பூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் காணொலி காட்சி பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் உரையாற்றினார்.

3-வது கட்ட பிரச்சாரம்

அதன் தொடர்ச்சியாக 3-வதுகட்ட காணொலி காட்சி பொதுக்கூட்டத்தை ராமநாதபுரத்தில் 12-ம் தேதி (நாளை) தொடங்குகிறார். டிச.14 -ம் தேதி திண்டுக்கல், 17 -கடலூர், 19 - திருவள்ளூர், 23 - சிவகங்கை, 26 - தஞ்சாவூர், 28 - நாகப்பட்டினம், திருவாரூர், 29 - திருவண்ணாமலை, 31 - அரியலூர்,பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் நடக்கும் காணொலி காட்சி பொதுக்கூட்டங்களில் ஸ்டாலின் உரையாற்றுகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன. தேர்தல் பணிகளுக்காக பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்துடன் கடந்த பிப்ரவரியில் திமுக ஒப்பந்தம் செய்துகொண்டது.

அதன்படி, சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக பல்லாயிரக்கணக்கானோரை பணியில் அமர்த்திதேர்தல் பணிகளை ஐ-பேக் மேற்கொண்டு வருகிறது.

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே ‘நமக்கு நாமே' என்ற பெயரில் பல்வேறு தரப்பு மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடும் பிரச்சாரத்தை ஸ்டாலின் தொடங்கினார்.

தற்போது கரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் பொதுக்கூட்டங்களில் காணொலி காட்சி மூலம் ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்.

அதேநேரத்தில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழிஎம்.பி. உள்ளிட்டோர் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT