தமிழகம்

துணைவேந்தராக சுரப்பா நியமிக்கப்பட்ட பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தில் தரகர்கள், அரசியல்வாதிகளின் தலையீடு இல்லை: விசாரணை ஆணையத்துக்கு ஆசிரியர்கள் சங்கம் கடிதம்

செய்திப்பிரிவு

அண்ணா பல்கலை துணைவேந்தராக சுரப்பா நியமிக்கப்பட்ட பிறகு,பல்கலைக்கழகத்தில் அரசியல்வாதிகள், இடைத் தரகர்களின் தலையீடு இல்லை. கல்வித் தரம்உயர்ந்துள்ளது என்று அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தினர் நீதிபதி பி.கலையரசன் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா மீதானமுறைகேடு புகார்கள் குறித்துகலையரசன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், சுரப்பாவுக்கு ஆதரவாக அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆணையத்துக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

முன்பெல்லாம் துணைவேந்தர், பதிவாளரின் அறைகளுக்கு அடிக்கடி தரகர்கள் வந்து செல்வதுவாடிக்கையாக இருந்தது. சுரப்பா துணைவேந்தர் ஆனதும், பல்கலைக்குள் நிலவிய, பணத்துக்கான மதிப்பெண் வழங்கும் கலாச்சாரமும், தரகர்கள் முறையும், ஊழலும் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக துறை தலைவர்கள், இயக்குநர்கள், பிற நிர்வாக பதவிகள் பணத்துக்காக விற்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் அறைகள், விருந்தினர் மாளிகையில் உள்ள அறைகளில் அரசியல்வாதிகள் ஆக்கிரமைப்பு முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

பல்கலையில் உள்ள முதுநிலைபட்டப் படிப்புகளில் கேட் தேர்வுஎழுதிய தகுதியான மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. உண்மையான தங்கப் பதக்கம் வழங்கப்பட்டாலும், பட்டமளிப்பு விழாக்களின் செலவு மிகவும் குறைப்பட்டது.

பல்கலைக்கழகம், உறுப்பு மற்றும் வளாக கல்லூரிகளில் உள்ள அனைத்து இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கும் ஏஐசிடிஇ ஒப்புதல்கள் கிடைத்தது. பிஎச்டிசேர்க்கைக்கு சிறந்த விதிகள்உருவாக்கப்பட்டன. சர்வதேச அளவில் சிறந்த பல்கலைக்கழக தரவரிசையில் அண்ணா பல்கலை.க்கான இடம் உயர்ந்துள்ளது. இந்த உண்மைகளை வைத்து விசாரணைக் குழு முழுமையாக ஆராய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT