கோப்புப்படம் 
தமிழகம்

வண்ணாரப்பேட்டை – திருவொற்றியூர் தடத்தில் ரயில் இன்ஜின் இயக்கி விரைவில் சோதனை ஓட்டம்

செய்திப்பிரிவு

சென்னையில் வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் மெட்ரோ ரயில் தடத்தில், இம்மாத இறுதிக்குள் ரயில் இன்ஜின் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் 45 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் இடையே மெட்ரோரயில் சேவையை தொடங்குவதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. மொத்தம் 9 கி.மீ தூரமுள்ள இந்த வழித்தடத்தில் சர் தியாகராயா கல்லூரி, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட 8 இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தடத்தில் ரயில் நிலையங்கள், தண்டவாளம் மற்றும் சிக்னல்களை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனஅதிகாரிகள் கூறும்போது, “சென்னையில் அடுத்தகட்டமாக வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கவுள்ளன. ரூ.3,700 கோடியில் இத்திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தடத்தலில் முக்கிய பணியான தண்டவாளங்கள், சிக்னல்கள் அமைக்கும் பணிகள், மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. 95 சதவீத பணிகள் தற்போது முடிந்துள்ளன.

இந்த தடத்தில் இம்மாத இறுதிக்குள் ரயில் இன்ஜின் இயக்கி சோதனை நடத்தவுள்ளோம். ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்திய பிறகு, மெட்ரோ ரயில்களை இயக்கி சோதனை நடத்தவுள்ளோம். இதைத் தொடர்ந்து அடுத்த மாதம் இந்த தடத்தில் மக்களின் பயன்பாட்டுக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்க திட்டமிட்டுள்ளோம்’’ என்றனர்.

SCROLL FOR NEXT