அரக்கோணம், நெமிலி வட்டாரங்களில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யாததால், விவசாயிகள் குவித்து வைத்துள்ள நெல் மூட்டைகளில் நாற்றுகள் முளைத்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யும் நோக்கில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், பெரும்பாலான நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்ட நிலையில் அரக்கோணம், நெமிலி, பனப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
குறிப்பாக, சங்கரம்பாடி, தக்கோலம், பள்ளூர், பெரும் புலிபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
நெமிலி வட்டம் எஸ்.கொளத்தூர் பகுதியில் செயல்படும் 2 நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்படு வதில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால், ‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ புயல் வருவதற்கு முன்பாகவே விவசாயிகள் பலர் நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு சென்று குவித்து வைத்துள்ளனர்.
ஆனால், அதிகாரிகளின் அலட்சியத்தால் தற்போது வரை நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் அதற்கு அருகே குவித்து வைத்திருந்த நெல் மூட்டைகளில் ஈரம் காரணமாக நாற்றுகள் முளைத்துள்ளன.
பல லட்சம் ரூபாய் நஷ்டம்
இதனால், விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. நெல் மூட்டைகளை விரைவில் கொள்முதல் செய்யாவிட்டால் மீதமுள்ள நெல் மூட்டைகள் அனைத்தும் வீணாகிவிடும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.