தொண்டையில் தென்னைப் பிஞ்சு சிக்கி ஆபத்தான நிலைக்குச் சென்றுவிட்ட ஒன்றரை வயது ஆண் குழந்தையின் உயிரைத் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
இதுகுறித்து மருத்துவமனை காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவர் எம்ஆர்கே ராஜாசெல்வம் கூறும்போது, “திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மூக்கு மற்றும் வாயில் நுரையுடன், சுயநினைவு இல்லாமல் ஒன்றரை வயதுக் குழந்தை ரோஹித் நேற்று இரவு அழைத்து வரப்பட்டார்.
திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையத்தில் இருந்து ஆபத்தான நிலையில் குழந்தையை அழைத்து வந்த தாய் நந்தினி உள்ளிட்டவர்கள், ஏதோ ஒரு பொருளை மென்று தின்றபோது, மூச்சு, பேச்சு இல்லாமல் போனதாகவும், அது என்ன பொருள் எனத் தெரியவில்லை என்றும் தெரிவித்தனர். நாடித் துடிப்பு குறைந்ததால், கண்முன்னே குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவது தெரிந்தது.
இதனால், குழந்தையை அறுவை சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு சென்று, அதன் பிறகு சிகிச்சை அளிக்கக்கூடிய சூழ்நிலை இல்லை. மிக மோசமான நிலையில் குழந்தை இருந்தது. இதனால், அறுவை சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்வதைத் தவிர்த்து, அவசர சிகிச்சைப் பிரிவிலேயே சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைப் பிரிவில் இருந்த மயக்க மருந்து மருத்துவர் ஆனந்த்ராஜ் தலைமையிலான குழுவை வரவழைத்து, சிகிச்சையைத் தொடங்கினோம்.
LARYNGO SCOPE முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சிகிச்சை மூலம் வாயைத் திறந்து பரிசோதனை செய்து பார்த்தபோது, பச்சை நிறத்தில் ஏதோ ஒரு பொருள், தொண்டைக் குழியில் சிக்கிக்கொண்டது தெரியவந்தது. அதனை எடுக்க முயன்றபோது, தொண்டைப் பகுதியில் உருண்டது. குழந்தையின் நிலையும் ஆபத்தை நோக்கிச் சென்றது.
பின்னர், கடுமையான முயற்சிக்குப் பிறகு வாய் வழியாகவே, தொண்டைப் பகுதியில் சிக்கிய பொருளை வெளியே எடுத்தோம். அதனைப் பார்த்தபோது எங்களுக்குப் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. குழந்தையின் தொண்டைக் குழியில் தென்னைப் பிஞ்சு சிக்கிக் கொண்டிருந்தது. 10 நிமிடப் போராட்டத்துக்குப் பிறகு, குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது.
பின்னர், செயற்கை சுவாசம் கொடுத்து, 20 நிமிடங்கள் எங்களது கண்காணிப்பில் வைத்திருந்தோம். அதன் பிறகு குழந்தையின் நிலையில் முன்னேற்றம் தெரிந்ததால், வார்டுக்கு அனுப்பி வைத்தோம். குழந்தை, இன்று நன்றாக இருக்கிறார். நாளை டிஸ்சார்ஜ் செய்ய வாய்ப்பு உள்ளது. குழந்தையைக் காப்பாற்ற மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை போராடினோம். என்னுடைய 15 ஆண்டு காலப் பணியில், இப்படியொரு சம்பவத்தைப் பார்த்ததில்லை. இறப்பை நோக்கிச் சென்ற குழந்தையைக் காப்பாற்றியது மனதுக்கு நிறைவைக் கொடுக்கிறது” என்றார்.
குழந்தையின் உயிரைக் காப்பாற்றிக் கொடுத்த மருத்துவர்களுக்கு, தாய் மற்றும் உறவினர்கள் கண்ணீருடன் நன்றி தெரிவித்துள்ளனர்.
பெற்றோருக்குக் கவனம் தேவை
மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆர்எம்ஓ என்.அரவிந்தன் கூறும்போது, “இது குழந்தை ரோஹித்துக்கு மறுபிறவி எனக் கூறலாம். ஆபத்தான நிலையில் குழந்தையை அழைத்து வரும்போது, அவசர சிசிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் இருந்ததால், குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது. 10 நிமிடம் தாமதித்திருந்தாலும், முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கும். தொண்டைக் குழியில் சிக்கிய பொருளால், நாடித் துடிப்பு அடங்கிக் கொண்டிருந்த குழந்தையை, மருத்துவர்கள் போராடி மீட்டுள்ளனர்.
குழந்தைகளைப் பெற்றோர் கவனமாக வளர்க்க வேண்டும். அவர்கள் இருக்கும் இடத்தில் சிறிய பொருட்கள் இல்லாமல், கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். நாணயம் உள்ளிட்ட பல சிறிய பொருட்களை விழுங்கி, குழந்தைகள் ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றன. இது பெற்றோரின் தவறாகும். அவர்களது கவனக்குறைவால், ஓர் உயிரை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.
குழந்தைகளை வளர்க்கும் பெற்றோருக்கு விழிப்புணர்வு அவசியம் தேவை. குழந்தைக்குப் பொருட்களின் ஆபத்து தெரியாது. மிகுந்த கவனத்துடன் குழந்தைகளைப் பாதுகாத்து வளர்க்க வேண்டிய கடமை ஒவ்வொரு பெற்றோருக்கும் உள்ளது” என்றார்.