கஞ்சாவுக்காக போதை ஊசி விற்ற ஜிப்மர் டாக்டருடன் (முகமூடியுடன் நிற்பவர்) கஞ்சா விற்ற மூவரையும் கைது செய்துள்ள போலீஸார். 
தமிழகம்

போதை ஊசி விற்ற ஜிப்மர் மருத்துவருடன் கஞ்சா விற்ற மூவரும் கைது: 1 கிலோ கஞ்சா பறிமுதல்

செ. ஞானபிரகாஷ்

கஞ்சாவுக்காக கேட்டமைன் போதை ஊசியை விற்றதாக ஜிப்மர் மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் கஞ்சா விற்பனையாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டு, அவர்களுடன் 1 கிலோ கஞ்சா, போதை ஊசி பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முதலியார்பேட்டை போலீஸார் 100 அடி சாலையில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் இன்று சோதனை நடத்தியபோது பாலியல் தொழிலில் பெண்ணை ஈடுபடுத்தியதாக விடுதி மேலாளர் உட்பட ஐவரை அண்மையில் கைது செய்தனர்.

மேலும் அதே விடுதியில் மற்றொரு அறையில் புதுவையைச் சேர்ந்த இளைஞர் தேவநாதன், பெங்களூரைச் சேர்ந்த பெண் நாத்தலி ஆகியோரை போதை மருந்து உட்கொண்ட, மயக்க நிலையில் போலீஸார் மீட்டனர். அந்தப் பெண்ணைச் சிகிச்சைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் அவர்களுக்கு கஞ்சா, போதை ஊசி ஆகியவை எங்கிருந்து கிடைத்தன என்று விசாரணையைத் தொடங்கினர்.

விசாரணையில் அவர்களுக்குக் கஞ்சா, போதை மருந்தை ஆரோவில்லில் பள்ளி ஆசிரியராகப் பணிபுரியும் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த இவான் வழங்கியது தெரியவந்தது. அதையடுத்து இவானைக் கைது செய்து விசாரணை நடத்தியதில் அவருக்கு லாஸ்பேட்டை பெலிக்ஸ் (32) என்பவர் கஞ்சா மற்றும் போதை மருந்தை வழங்கியது தெரியவந்தது. இவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் பெலிக்ஸின் கூட்டாளிகள் வில்லியனூர் பார்த்தசாரதி (23), மணிகண்டன் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா மற்றும் 2 போதை மருந்து பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.

ஜிப்மர் மருத்துவர் பிடிபட்டார்

அவர்களுக்குப் போதை மருந்து கிடைத்தது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் ஆஸ்பத்திரியில் மயக்கவியல் நிபுணராகப் பணியாற்றி வரும் புதுவையைச் சேர்ந்த டாக்டர் துரையரசன் (29) கொடுத்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து டாக்டர் துரையரசன் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து 3 போதை மருந்து பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் போதைப் பொருட்கள் விற்பனைக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தபோது, "கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான ஜிப்மர் மருத்துவர் துரையரசன், கேட்டமைன் என்னும் போதை மருந்து ஊசி பாட்டில்களை பெலிக்ஸிடம் தந்து அதற்குப் பதிலாகக் கஞ்சா பெற்று வந்துள்ளார். கேட்டமைன் ஊசியை பெலிக்ஸ் விற்று வந்துள்ளார்.

இந்த வழக்கில் மேலும் பலருக்குத் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. அவர்களைக் கைது செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. போதை ஊசிப் பரிமாற்றம் தொடர்பாக ஜிப்மரில் யாருக்கேனும் தொடர்புள்ளதா என்பதையும் விசாரிக்கிறோம். மேலும் ஜிப்மர் நிர்வாகத்திடம் இது பற்றியும் டாக்டர் மீதும் புகார் அளிக்கப்பட்டது. அவர்களும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்" என்று குறிப்பிட்டனர்.

SCROLL FOR NEXT