மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஜங்ஷன் முதல் மேலமடை வழியாக கோமதிபுரம் வரை 2 கி.மீ., தொலைவிற்கு ரூ.300 கோடியில் பறக்கும் பாலம் பிரம்மாண்டமாக அமைக்க நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது.
மதுரை அண்ணா பஸ்நிலையம் அருகே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகம் சாலையையும், அண்ணா பஸ் நிலையத்தையும் இணைக்கும் ஜங்ஷன் பகுதியில் ஆவின் அலுவலகம் வழியாக பாண்டிக்கோயில் ரிங் ரோடு செல்லும் சாலை மிக முக்கியமானது.
இந்த சாலையில் காலை முதல் இரவு வரை போக்குவரத்து பரபரப்பாக காணப்படும். இந்த சாலையில் அப்போலோ மருத்துவமனை வழியாக அண்ணா நகர் செல்லும் லேக் வியூ சாலை, கே.கே.நகர் 80 அடி சாலை போன்ற இணைப்பு சாலைகள் குறுக்காக கடந்து செல்கின்றன.
அதனால், மதுரையின் தெற்கு, வடக்கு பகுதிகளில் இருந்து நகர்பகுதிக்கு வருவோரும், ரிங் ரோடு சென்று தென் மாவட்டங்களுக்கு செல்வதற்கும் இந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ரிங் ராடு செல்லும் சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்த வேண்டியவுள்ளது.
நாளுக்கு நாள் இந்த சாலையில் வாகனப்போக்குவரத்து அதிகரித்து வருகிறது. ஆனால், இந்த சாலையில் எந்த மேம்பாலமும் இல்லாததால் அண்ணா பஸ்நிலையம் ஜங்ஷன், கே.கே.நகர் 80 அடி சாலை கடக்கும் ஆவின் சிக்கனல், அண்ணா நகர் சாலை கடக்கும் மேலமடை சிக்கனல் ஆகிய மூன்று சிக்னல்கள் உள்ளன.
அதனால் மிகக் குறுகிய ஒன்றரை கி.மீ., தொலைவிற்குள் இந்த சாலையில் செல்வதற்கு வாகன ஓட்டிகள் இந்த மூன்று சிக்னல்களை நின்றுதான் செல்ல வேண்டிய உள்ளது.
ஏதாவது ஒரு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் இந்தக் குறுகிய ஒன்றைரை கி.மீ., பகுதியைக் கடக்க அரை மணி நேரமும் ஆகிவிடுகிறது.
அதுபோல், மேலமடை சிக்னல் பகுதியில் குறுக்காக செல்லும் லேக்வியூ சாலை விரிவுப்படுத்தப்படவில்லை. அதுபோல் அப்பகுதியில் உள்ள தரைப்பாலமும் அகல்படுத்தப்படவில்லை. அதனால், இப்பகுதியில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
இந்நிலையில் மாநில நெடுஞ்சாலைத்துறை இந்த மூன்று சிக்னல் பகுதியில் நீடிக்கும் நெரிசலுக்கு தீர்வு காண, மாவட்ட ஆட்சியர் அலுவலக ஜங்ஷன் ரவுண்டானா பகுதியிலிருந்து மேலமடை சிக்னலை தாண்டி பாண்டிக் கோயில் ரிங்ரோடு செல்லும் சாலையில் கோமதிபுரம் வரை 2 கி.மீ., தொலைவிற்கு பறக்கும் சாலை அமைக்க முடிவு செய்துள்ளது.
இதற்காக, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கடந்த 2 மாதமாக இந்த சாலைகளில் எந்தெந்தப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், சாலையை விரிவுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
தற்போது ஆய்வின் முடிவில் ரூ.300 கோடி அளவுக்கு பறக்கும்சாலை அமைக்கலாம் என்று திட்டம் தயார் செய்துள்ளனர். இந்த திட்டம் அரசு ஒப்புதலுக்கு மாவட்ட நெடுஞ்சாலைத்துறை விரைவில் அனுப்ப உள்ளது.
அரசு ஒப்புதல் வழங்கியதும், உறுதியான திட்டமதிப்பீடு செய்து நிதி ஒதுக்கீடுக்கு ஒப்புதல் வழங்க ஏற்பாடு செய்யும் என மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘தற்போதுதான் இந்த திட்டத்திற்கான ஆய்வு நடக்கிறது.
விரைவில் இறுதிவடிவம் பெறும். திட்டமிட்டப்படி பறக்கும் பாலம் அமைந்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஆவின் சிக்னல், மேலமடை சிக்னல் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும். மக்களும், வாகன ஓட்டிகளும் மிக எளிதாக இப்பகுதிகளைக் கடந்து செல்வார்கள், ’’ என்றார்.