மானாமதுரை அருகே கீழப்பசலை விலக்கு பகுதியில் மதுரை-ராமேஸ்வரம் நான்குவழிச்சாலையில் மறியலில் ஈடுபட்ட கிராமமக்கள். 
தமிழகம்

மானாமதுரை அருகே வைகை ஆற்றிலிருந்து தண்ணீர் திறக்காததைக் கண்டித்து கிராம மக்கள் மறியல்: ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்காததைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் மதுரை-ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வைகை அணையில் இருந்து வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதில் சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு டிச.8-ம் தேதியில் இருந்து ஒரு வாரத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் சிவகங்கை மாவட்டத்தை வந்தடைந்தநிலையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறைப்படி கால்வாய்களில் தண்ணீரை திறக்கவில்லை.

இதையடுத்து விவசாயிகள் ஆங்காங்கே தண்ணீரை மறித்து தங்கள் பகுதிகளுக்கு எடுத்து செல்கின்றனர். இதனால் மானாமதுரை அருகே மாவட்டத்தின் கடைகோடி பகுதியான கீழப்பசலை கால்வாயில் தண்ணீர் செல்லவில்லை.

தண்ணீரின்றி கீழப்பசலை, மேலப்பசலை, சங்கமங்கலம் பகுதிகளில் பல நூறு ஏக்கரில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன.

இதையடுத்து தங்களது பகுதிக்கு தண்ணீர் திறக்காததை கண்டித்து கீழப்பசலை, மேலப்பசலை, சங்கமங்கலம் கிராமமக்கள் மதுரை-ராமேஸ்வரம் நான்குவழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டம் ஒரு மணி நேரம் நீடித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், போலீஸார் கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தண்ணீர் திறப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து கிராமமக்கள் கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT