தமிழகம்

பேச்சிப்பாறை நீர்மட்டம் 45 அடியை எட்டியதால் தொடர் கண்காணிப்பு: 670 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்

எல்.மோகன்

குமரி மாவட்டத்தின் நீர்ஆதாரமான பேச்சிப்பாறை நீர்மட்டம் இன்று 45 அடியை எட்டியதால் 24 மணி நேரமும் பொதுப்பணித்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அணையில் இருந்து விநாடிக்கு 670 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கனமழை பெய்ததால் அணைகள், பாசன குளங்கள் நிரம்பி வழிகின்றன.

தற்போதும் மலையோர பகுதிகளில் விட்டு விட்டு சாரல்மழை பொழிந்து வருகிறது. மேலும் வருகிற பிப்ரவரி மாதம் வரை வடகிழக்கு பருவமழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணைகளில் போதிய நீர்இருப்பு உள்ளதால் குமரி முழுவதும் கும்பப்பூ சாகுபடி பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய நீர்ஆதாரமான 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று 45 அடியாக உயர்ந்தது. அணைக்கு விநாடிக்கு 521 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வருகிறது. இதனால் எந்நேரமும் அதிகமான தண்ணீர் உள்வரத்தாக வந்தால், அணையில் இருந்து அதிக கனஅடி தண்ணீர் திறந்துவிடுவதற்கான முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை நீர்ஆதார பொறியாளர் குழுவினர் பேச்சிப்பாறை அணைப்பகுதியை 24 மணி நேரமும் துல்லியமாக கண்காணித்து வருகின்றனர். பேச்சிப்பாறை அணையில் இருந்து விநாடிக்கு 670 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதைப்போல் 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 70.50 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 287 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வரும் நிலையில் அணையில் இருந்து 350 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 20 அடியாக உள்ளது.

SCROLL FOR NEXT