தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று காத்திருப்புப் போராட்டம் தொடங்கியது.
போராட்டத்துக்கு, சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் முன்னிலை வகித்தார்.
வாசுதேவநல்லூர் தரணி சர்க்கரை ஆலை நிர்வாகம் கடந்த 2018-19ம் ஆண்டு அரவை செய்த கரும்புக்கு உரிய பணம் ரூ.23.72 கோடியை 15 சதவீத வட்டியுடன் உடனடியாக வழங்க வேண்டும்.
2019-20ம் ஆண்டு அரவை செய்த கரும்புக்கு ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.137.50 உடனடியாக வழங்க வேண்டும். 2020-21ம் ஆண்டு அரவை செய்யும் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.
கரும்பு வெட்டுக் கூலியை ஆலை நிர்வாகமே ஏற்கவேண்டும். 204 முதல் 2008 வரையிலான லாபப் பங்கு 10 கோடியை விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, “தமிழகத்தில் உள்ள 42 சர்க்கரை ஆலைகளில் 2018-19ம் ஆண்டுக்கு மத்திய அரசு நிர்ணயம் செய்த ஒரு டன் கரும்புக்கு ரூ.2612.50ஐ 18 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகளும், 21 தனியார் சர்க்கரை ஆலைகளும் வழங்கிவிட்டன. ஆனால் தரணி ஆலை நிர்வாகத்தின் கீழ் உள்ள 3 ஆலைகள் மட்டும் விவசாயிகளுக்கு பணம் வழங்காமல் 21 மாதங்களாக ஏமாற்றி வருகிறது.
இதனால், விவசாயம் செய்ய முடியாமலும், மருத்துவச் செலவு, குடும்பச் செலவுகளை செய்ய முடியாமலும் கந்துவட்டிக்கு பணம் வாங்கி விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் குரல் எழுப்பியும், பல்வேறுகட்ட போராட்டங்கள் நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை. பேச்சுவார்த்தையில் கொடுத்த வாக்குறுதிகளை ஆலை நிர்வாகம் நிறைவேற்றவில்லை. கரும்புக்கான நிலுவைத் தொகை கிடைக்கும் வரை காத்திருப்புப் போராட்டம் தொடரும்” என்றனர்.
விவசாயிகளின் போராட்டத்தையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.