தமிழகம்

ரஜினியுடன் கூட்டணி அமையுமா?சட்டப்பேரவைத் தேர்தலில் பங்களிப்பு என்ன?- மு.க.அழகிரி பதில்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

"சட்டப்பேரவைத் தேர்தலில் புதிய கட்சி தொடங்குவது, கூட்டணி அமைப்பது, வாக்களிப்பது போன்ற பங்களிப்பு இருக்கும்" என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்தார்.

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர் கட்சியில் இணைய அழகிரி எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில், சமீபகாலமாக அவர் ஒதுங்கியிருந்தார்.

இந்நிலையில், தமிழகம் வரும் அமித் ஷாவை அழகிரி சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் பரவின. ஆனால், அதனைப் புறந்தள்ளிய மு.க.அழகிரி, தனிக் கட்சி தொடங்குவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், மதுரை அருகே அழகர் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) திருமண நிகழ்வில் முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி கலந்துகொண்டார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர்.

அதற்கு அவரும் நிதானமாகப் பதில் அளித்துச் சென்றார்.

கேள்வி: சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களது பங்களிப்பு எவ்வாறு இருக்கும்?

பதில்: சட்டப்பேரவைத் தேர்தலில் புதிய கட்சி தொடங்குவது, கூட்டணி அமைப்பது, ஓட்டுப் போடுவது போன்ற பங்களிப்பு இருக்கும்.

கேள்வி: ரஜினியுடன் கூட்டணி அமைக்கப்படுமா?

பதில்: வாய்ப்பு கிடைத்தால் அவருடன் நடிப்பேன்.

கேள்வி: ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளீர்களா?

பதில்: ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

கேள்வி: ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்கியுள்ளார். அதுபற்றி உங்கள் கருத்து?

பதில்: ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்தவுடனேயே அவருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டேன்.

கேள்வி: இந்தத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீர்கள்?

அதைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் வாக்கு அளிப்பேன்.

இவ்வாறு அழகிரி கூறினார்.

SCROLL FOR NEXT