‘நிவர்’ புயல் பாதிப்பு நிவாரணத்துக்காக மாவட்ட நிர்வாகங்கள், மின்துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட 12 துறைகளுக்கு மொத்தம் ரூ.74 கோடியே 24 லட்சம் நிதியை மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமைச் செயலர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்ப தாவது:
வங்கக்கடலில் கடந்த நவ.22-ம்தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ‘நிவர்’ தீவிர புயலாக வலுப்பெற்று, புதுச்சேரி அருகில் நவ.25-ம் தேதி இரவு 11.30 மணியில் இருந்து 26-ம் தேதிஅதிகாலை 2.30 மணி வரை கரையைக் கடந்தது.
இதனால், கடலோர மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, பாதிப்புகளுக்கான நிவாரணத்துக்காக ரூ.74 கோடியே 24 லட்சம் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து விடுவிக்க வருவாய்த் துறை கூறியதைதொடர்ந்து அந்தத் தொகை விடுவிக்கப்படுகிறது.
அதன்படி, புயலால் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.24 லட்சம்,கால்நடைகளுக்கு இழப்பீடாக ரூ.41 லட்சம், ஓட்டு வீடுகள், குடிசைகள் சேதத்துக்கு ரூ.59 லட்சம், பொதுப்பணித் துறைக்கு ரூ.20 கோடி, வேளாண் துறைக்கு ரூ.5 கோடி, தோட்டக்கலைத் துறைக்கு ரூ.1 கோடி, நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.10 கோடியும்,
மேலும், சென்னை மாநகராட்சிக்கு ரூ.10 கோடி, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்துக்கு ரூ.10 கோடி, ஊரகவளர்ச்சித் துறைக்கு ரூ.5 கோடி,பொது சுகாதார இயக்ககத்துக்கு ரூ.2 கோடி, மீனவளத்துக்கு ரூ.1 கோடி, சென்னை குடிநீர் வாரியத்துக்கு ரூ.2 கோடி, வனத்துறைக்கு ரூ.2 கோடி, நகராட்சி நிர்வாகத்துக்கு ரூ.5 கோடி என ரூ.74 கோடியே 24 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.