ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 போட்டியில் தனது யார்க்கர் பந்து வீச்சின் மூலம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த தமிழக வீரர் நடராஜன், குடும்ப வறுமையிலும் தனது கிரிக்கெட் ஆர்வத்தால் இந்த இடத்தை பிடித்துள்ளார். சாதாரண குடும்ப பின்னணி கொண்ட நடராஜனின் பெற்றோர் இன்றும் தங்கள் கிராமத்தில் சில்லி சிக்கன் கடை நடத்தி வருகின்றனர்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணி, டி-20 தொடரைக் கைப்பற்ற தமிழக வேகப்பந்து வீச்சாளார் நடராஜனின் பங்கு முக்கியமானது. நடராஜன் சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்த சின்னப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். ஐபிஎல்அணியில் நடராஜன் விளையாடிய பின்னர், கிராமத்தில் புதிதாக வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டில் அவரது தாய் சாந்தா (53), அப்பா தங்கராஜ் (55), தம்பி சக்தி, தங்கைகள் திலகவதி, தமிழரசி, மேகலா ஆகியோர் வசிக்கின்றனர்.
கிரிக்கெட்டில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள நடராஜனின் குடும்பம், விளையாட்டை ஊக்கப்படுத்தும் அளவுக்கு வசதியானதல்ல. தொடக்கத்தில் நடராஜனின் பெற்றோர் நெசவுத் தொழிலுக்கு சென்று வந்ததுடன், வீட்டின் முன்புறம் 10-க்கு 10 அளவில் மாலையில் சில்லி சிக்கன் கடையை நடத்தி வருகின்றனர்.
நடராஜனின் கிரிக்கெட் ஆர்வம் தொடர்பாக அவரது பெற்றோர் கூறியதாவது: சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் மீது நடராஜனுக்கு ஆர்வம் அதிகம். கிரிக்கெட் போட்டி நடக்கும் இடங்களில் எல்லைக்கு வெளியே விழும் பந்துகளை எடுத்து பவுலிங்போல வீசுவான். ஜெயப்பிரகாஷ் என்பவர் தான் நடராஜனின் கிரிக்கெட் ஆர்வத்தை புரிந்து கொண்டு பயிற்சி அளித்தார்.
6-ம் வகுப்பு படிக்கும்போது வலது கையில் அடிபட்டதை பொருட்படுத்தாமல், இடது கையில் கிரிக்கெட் விளையாடினான். உள்ளூரில் பிளஸ் 2 முடித்த பின்னர் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில், பிபிஏ படித்தார்.
அதன் பின்னர் ஜெயப்பிரகாஷின் முயற்சியில், ரஞ்சி, டிஎன்பிஎல் என விளையாடி, ஐபிஎல்., போட்டிக்கு நடராஜன் தேர்வு பெற்றார். இப்போது, இந்திய அணிக்காக விளையாடுவது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
எங்களின் பழைய வாழ்க்கையை மறக்கக் கூடாது எனபதால், உடல் ஆரோக்கியம் இருக்கும் வரை சில்லி சிக்கன் கடையை நடத்த வேண்டும் என நாங்கள் நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
நடராஜனின் சகோதரிகள் கூறும்போது, “அண்ணணுக்கு எங்கள் அனைவர் மீதும் பாசம் அதிகம். எங்களை படிக்க வைத்தது
அண்ணன் தான். கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ளவர்களின் திறமையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதற்காக எங்கள் அண்ணனும் ஜெயபிரகாஷ் அண்ணனும் சேர்ந்து, நடராஜன் கிரிக்கெட் அகாடமியை தொடங்கியுள்ளனர். இதில், ஏழை மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது. இதே ஊரைச் சேர்ந்த வகுப்பு தோழியைத் தான், அண்ணன் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார். அண்ணனுக்கு பெண் குழந்தையுள்ளது” என்றனர்.