தமிழகம்

அறப்பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர் நா.மகாலிங்கம்: முன்னாள் தலைமைச் செயலாளர் பி.எஸ்.ராகவன் புகழாரம்

செய்திப்பிரிவு

அறப்பணிகள் செய்வதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் என்று மேற்கு வங்க மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் பி.எஸ்.ராகவன் புகழாரம் சூட்டினார்.

ராமலிங்கர் மணி மன்றம் மற்றும் ஏ.வி.எம்.அறக்கட்டளை இணைந்து நடத்திய அருட்பிரகாச வள்ளலார் மகாத்மா காந்தி பொன்விழா நேற்று மயிலாப்பூர் ஏ.வி.எம். ராஜேஸ்வரி திருமண அரங்கில் தொடங்கியது. விழாவுக்கு தலைமையேற்ற மேற்கு வங்க மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் பி.எஸ்.ராகவன் பேசியதாவது:

பாராட்டப்பட வேண்டியவர்களை நாம் பாராட்ட வேண்டும். அப்படி பாராட்டும்போதுதான் அவர்கள் ஊக்கமும், உற்சாகமும் பெற்று இன்னும் சிறப்பாக தங்களது பணிகளைச் செய்வார்கள். அப்படி திறமைகளைக் கண்டறிந்து மனம் திறந்து பாராட்டியவர் பொள்ளாச்சி மகாலிங்கம்.

இன்றைய இளைஞர்கள் நமது தேசத் தியாகிகளைப் பற்றி ஏதும் அறியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னுதாரணமாய் காட்டக்கூடிய தலைவர்கள் இன்றைக்கு இல்லை.நாட்டில் தீமைகள் பெருகுவது தீமைகளால் அல்ல; நல்லவர்கள் யாருக்கும் தீமைகளை தட்டிக் கேட்கிற துணிவு இல்லாமல் போனதே காரணம்.

நாட்டின் வளர்ச்சிக்கான அறப்பணிகளைச் செய்வதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர் பொள்ளாச்சி மகாலிங்கம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இவ்விழாவில்,அருட்ஜோதி காந்திய விருது வேம்பத்தூர் கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது. ராமலிங்கர் பணி மன்றத்தின் பொன் விழா மலரும் வெளியிடப்பட்டது. ராமலிங்கர் பணி மன்ற தலைவர் ம.மாணிக்கம், முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராசன், தவத் திரு ஊரன் அடிகள், முன்னாள் நீதிபதி ச.மோகன், ஏ.வி.எம்.சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நேற்று தொடங்கிய இவ்விழா வரும் அக்டோபர் 8-ம் தேதிவரை 8 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT