சென்னை ஆதம்பாக்கம் அருகே, நேற்று சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் இப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
சென்னை, ஆலந்தூர் ராம் நகரில் இருந்து வாணுவம்பேட்டையை இணைக்கும் பிரதான சாலையில் (நங்கநல்லூர் பிரதான சாலை) தனியார் மருத்துவமனை அருகே கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு இருந்துள்ளது. இந்த சாலையில் நேற்று திடீரென 10 அடி ஆழத்தில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதைக் கண்டு அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சாலையில் அப்பகுதி மக்களே தடுப்புகள், கற்கள் அமைத்து சாலையை மூடியுள்ளனர். இதனால் அவ்வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதுகுறித்த தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்தனர். இதைத் தொடர்ந்து சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரிய அதிகாரிகள் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை ஆய்வு செய்தனர். இந்த சாலையின் இரு பக்கங்களிலும் மழைநீர் வடிகால்வாய், கழிவுநீர் வடிகால்வாய் அமைக்கப் பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக கழிவுநீர் குழாய் உடைந்து மண் அரிப்பு ஏற்பட்டு சாலையின் நடுவே திடீரென பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் முழுமையான ஆய்வுக்குப் பிறகே சாலையில் திடீர் பள்ளம் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து அறிய முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து பள்ளம் விழுந்த சாலையை உடனடியாக சீரமைக்கும் பணி நடைபெறத் தொடங்கியது.