புயல் நிவாரணத்திற்காக தமிழகஅரசு கோரும் நிதியை மத்தியஅரசு எந்த குறைவும் இல்லாமல் அப்படியே வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத் தியுள்ளார்.
கடலூரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது:
பதராய் போகும் பயிர்கள்
கடலூர் மாவட்டத்தில் சுமார் 1.50 லட்சம் ஏக்கருக்கு மேல் நெல்பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் வடிந்த சில இடங்களில் நெற்பயிரை பார்க்க பச்சைப் பசேலென தெரிந்தாலும், மழை வெள்ளத்தில் மூழ்கிய இப்பயிர் விளைந்தால் பதராகத் தான் இருக்கும். எனவே, நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம், வாழைக்கு ரூ.50 ஆயிரம் என ஒவ்வொரு பயிருக்கும் உரிய இழப்பீட்டை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். கடந்த 2000-ம் ஆண்டு முதல் கடலூர் மாவட்டத்தில் மட்டும் 9 முறை புயல், பெருவெள்ளம் போன்ற இயற்கை சீற்றம் ஏற்பட்டுள்ளது. பாதிப்பின் போது அமைச்சர்கள் பார்வையிடுவதும், நிவாரண உதவி வழங்குவது மட்டுமே நடக்கிறது. தொலை நோக்குடன் நிரந்தர தீர்வு காண வேண்டும்.
பெய்யும் மழையை சேமிக்க, கொள்ளிடத்தில் 7 கதவணைகள் அமைக்க வலியுறுத்தப்பட்டது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் ஆதனூர்- குமாரமங்கலம் இடையே ஒரு கதவணை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்தப் பணி தான் ரூ.400 கோடி மதிப்பீட்டில் தற்போது வரை நடைபெற்று வருகிறது. மற்ற கதவணைகளையும் அமைக்க வேண்டும்.
தூர் வாராத ஏரிகள்
1.65 டிஎம்சி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் தற்போது 0.852 டிஎம்சி மட்டுமே தேக்க முடிகிறது. வீராணம் உள்பட அனைத்து ஏரிகளையும் தூர்வார வேண்டும். கடந்த புயல் வெள்ளத்தின் போது மாநில அரசு மத்திய அரசிடம் ரூ.22 ஆயிரம்கோடி கேட்டது. ஆனால் கொடுத்ததோ வெறும் ரூ. 400 கோடி. கடந்தவறட்சியின்போது ரூ. 19,000 கோடிகேட்டதற்கு, மத்திய அரசோ ரூ.350 கோடி அளவிற்கு கொடுத்தது.
வெள்ள பாதிப்பின் போது மத்திய குழு வருவது, பார்வையிடுவது, மத்திய அரசிடம் அறிக்கை அளிப்பது ஒரு ஏமாற்று வேலையாகவே தெரிகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிவாரணம் கிடைக்கவில்லை.
தமிழக அரசு வறட்சி, புயல் பாதிப்புகளுக்காக மத்திய அரசிடம் கோரும் நிதியில் 10 சதவீதம் மட்டுமே வழங்குகிறது. பின்னர் எதற்காக மத்தியக் குழுவினை அரசு அனுப்பி வைக்க வேண்டும். எனவே, இதில் தமிழக அரசு கோரும் நிதியை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும்.
சேலம் 8 வழிச்சாலை தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு விவசாயிகளை பாதிக்கும். இதே போன்று சென்னை-திருவள்ளூர்-பெங்களூரு சாலைக்காக சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இரு திட்டங்களையும் அரசு கைவிட வேண்டும்.
வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது என்று மத்திய அரசு கூறி விட்டதால் இப்போராட்டம் நீடித்துக் கொண்டே செல்லும். பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதற்காகவே கோடிக்கணக்கான விவசாயிகளின் நலனை அதிமுக காவு கொடுத்து விட்டது என்று தெரிவித்தார்.
பேட்டியின் போது மார்க்சிஸ்ட் கம்யூ. கடலூர் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மருதவாணன், கருப்பையன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.