சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தொடர் மழையால் சாலை துண்டிக்கப்பட்டதால் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.
காரைக்குடி அருகே பெரிய கொட்டகுடி ஊராட்சி நென்மேனியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
இதே ஊரைச் சேர்ந்த மேலக்குடியிருப்பில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. நென்மேனியில் இருந்து மேலக்குடியிருப்புக்கு ஒரு கி.மீ.,க்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் அரை கி.மீ. தார்சாலையாகவும், அரை கி.மீ. மண் சாலையாகவும் உள்ளது.
இச்சாலை வழியாக மேலக்குடியிருப்பு மக்கள் நென்மேனி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் திடீரென சாலையில் மெகா பள்ளம் ஏற்பட்டு துண்டிக்கப்பட்டது.
இதனால் மேலக்குடியிருப்பு மக்கள் நென்மேனி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர் திருப்பதிராஜன், ஊராட்சித் தலைவர் தனபால் உள்ளிட்டோர் சேதமடைந்த சாலையை பார்வையிட்டனர்.
உடனடியாக தற்காலிக சாலை அமைக்கப்படும் எனவும், விரைவில் புதிய தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.