திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களை முதல்வர் பழனிசாமி வயலில் இறங்கி ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என விவசாயிகளிடம் உறுதி தெரிவித்தார்.
புரெவி புயல் தாக்கத்தின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் அதிக மழை பெய்ததால் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின.
இதனைத் தொடர்ந்து மழை பாதிப்புகளைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருவாரூர் மாவட்டத்தில் இன்று (டிச.9) ஆய்வு செய்தார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்துள்ள கொக்கலாடி பகுதியில் மழை நீரில் மூழ்கியுள்ள சம்பா நெற்பயிர்களை வயலில் இறங்கி ஆய்வு செய்தார். அப்போது, அழுகிய நிலையில் இருந்த சம்பா நெற்பயிர்களை விவசாயிகள் முதல்வரிடம் காட்டி வேதனை தெரிவித்தனர்.
அப்போது, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும் என விவசாயிகளிடம் தெரிவித்து முதல்வர் ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து, திருத்துறைப்பூண்டி மற்றும் சுந்தரப் பகுதியில் அரசு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி முதல்வர் ஆறுதல் கூறினார்.