மழையால் ஏற்பட்ட சாலைக்குழிகளைச் சீரமைக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (டிச.9) வெளியிட்ட அறிக்கை:
"சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே செப்பனிடப்படாமல் இருந்த சாலைப் பள்ளத்தில் விழுந்த முதியவர் ஒருவர் தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை கோடம்பாக்கம் மேம்பாலத்தின் தியாகராய நகர் பகுதியில் உள்ள பக்கவாட்டுச் சாலையில் ஏற்பட்டிருந்த பள்ளத்தில் மழைநீர் பெருமளவில் தேங்கியிருந்தது. அந்த வழியாக நடந்து சென்ற நரசிம்மன் என்ற முதியவர் அங்கு பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் விழுந்து காயமடைந்தார். தலையில் பலத்த காயமடைந்த நிலையில் மயங்கி விழுந்த அவர், அடுத்த சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார். அவர் இறந்ததற்கு வேறு காரணங்கள் இருக்கலாம் என்று சென்னை மாநகராட்சி விளக்கமளித்துள்ள போதிலும், கோடம்பாக்கம் மேம்பாலத்தை ஒட்டிய சாலையில் மிகப்பெரிய அளவில் பள்ளம் இருந்ததும், அதில் முதியவர் விழுந்து தலையில் பலத்த காயமடைந்ததும் உண்மை. அதை யாரும் மறுக்க முடியாது.
கோடம்பாக்கம் மேம்பாலத்தையொட்டிய சாலையில் ஒரு மாதத்திற்கும் மேலாகவே பள்ளம் இருந்து வந்ததாகவும், அதுகுறித்து அப்பகுதி மக்கள் 10 முறைக்கும் கூடுதலாகப் புகார் செய்தும் மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பள்ளத்தில் விழுந்து முதியவர் இறந்தது குறித்த செய்தி வெளியான சிறிது நேரத்தில் அங்கு விரைந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் பள்ளத்தை நிரப்பி, அதன் மீது புதிய சாலையை அமைத்துவிட்டனர். இந்த வேகத்தை பள்ளம் உருவானபோதே காட்டியிருந்தால் விலைமதிப்பற்ற ஓர் உயிரை இழந்திருக்க மாட்டோம்.
சென்னை மதுரவாயலை அடுத்த நொளம்பூரில் சாலையோரத்தில் மூடப்படாமல் இருந்த கழிவு நீர் கால்வாயில், இருசக்கர வாகனத்தில் சென்ற தாயும், மகளும் விழுந்து உயிரிழந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பே சாலைப் பள்ளத்தில் விழுந்து முதியவர் உயிரிழந்திருப்பதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ந்துவிட்ட நிலையில், எவ்வளவு மோசமான பள்ளங்களையும் எளிதாகச் சீரமைக்கும் அளவுக்கு கருவிகள் வந்துவிட்ட நிலையில் சாலைப் பள்ளங்களில் விழுந்து மக்கள் உயிரிழக்கின்றனர் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதிகாரிகளின் அலட்சியம்தான் இதற்கு முக்கியக் காரணமாகும்.
தமிழ்நாட்டை அடுத்தடுத்து தாக்கிய நிவர் மற்றும் புரெவி புயலால் மாநிலம் முழுவதும் உள்ள சாலைகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. குறிப்பாக, தலைநகரம் சென்னையில் முக்கிய சாலைகள் பயணம் செய்ய முடியாத அளவுக்கு மழையால் சேதமடைந்துள்ளன. சாதாரண நேரங்களிலேயே அச்சாலைகளில் பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது. மழை பெய்து அவற்றில் தண்ணீர் தேங்கி நிற்கும்போது, அவற்றில் புதிதாகப் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் பள்ளங்களில் விழுந்து காயமடைகின்றனர்.
கடந்த சில நாட்களில் மட்டும் சாலைப் பள்ளங்களில் விழுந்து காயமடையும் அளவுக்கான விபத்துகள் நூற்றுக்கணக்கில் நடக்கின்றன. மழையால் ஏற்பட்ட சாலைகளை முழுமையாகச் சீரமைப்பது உடனடியாக சாத்தியமில்லை என்பதும், அதற்கான பணிகளை மேற்கொள்வதற்கு முன் பல்வேறு நடைமுறைகளைக் கடக்க வேண்டும் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனாலும், மிகவும் ஆபத்தான சாலைப் பள்ளங்கள் உடனடியாகச் சீரமைக்கப்பட வேண்டும்; இல்லாவிட்டால் உயிரிழப்புகளைத் தடுக்க முடியாது.
எனவே, தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்துச் சாலைகளை உடனடியாகச் சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இதற்குத் தேவையான நிதியை நெடுஞ்சாலைத் துறைக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தமிழக அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.