தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன 60 செல்போன்களை போலீஸார் மீட்டனர். இந்த செல்போன்களை இன்று உரிமையாளர்களிடம் திருநெல்வேலி சரக டிஐஜி நேரில் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2019 முதல் இதுவரை காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக விசாரணை நடத்தி செல்போன்களை கண்டுபிடித்து மீட்க தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் உதவி ஆய்வளார்கள் சுதாகரன், பெர்லின் பிரகாஷ், காவலர்கள் சாபு, சதீஷ்குமார், எடிசன் மற்றும் புவனேஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படையை அமைத்து எஸ்பி எஸ்.ஜெயக்குமார் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி சைபர் குற்றப்பிரிவு தனிப்படையினர் செல்போன்கள் எங்கெங்கு உள்ளன என்பதை அதன் ஐஎம்இஐ எண்ணை வைத்து கண்டு பிடித்து, சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தெரிவித்து அவற்றை பறிமுதல் செய்தனர்.
அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட 102 செல்போன்களை ஏற்கெனவே கடந்த 15.10.2020 அன்று உரிமையாளர்களிடம் எஸ்.பி ஜெயக்குமார் ஒப்படைத்தார்.
அதன் பிறகும் சைபர் குற்றப்பிரிவு தனிப்படையினர் தொடர்ந்து கண்காணித்து வந்ததன் அடிப்படையில் தற்போது மேலும் 60 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி துணை கோட்ட காவல்நிலையங்களில் 25, ஊரக துணைக் கோட்டத்தில் 7, திருச்செந்தூர் துணைக் கோட்டத்தில் 5, ஸ்ரீவைகுண்டம் துணைக் கோட்டத்தில் 6, மணியாச்சி துணைக் கோட்டத்தில் 4, கோவில்பட்டி துணைக் கோட்டத்தில் 8, விளாத்திக்குளம் துணைக் கோட்டத்தில் 4, சாத்தான்குளம் துணைக் கோட்டத்தில் 1 என மொத்தம் 60 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும்.
இந்த செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீன் குமார் அபிநபு கலந்து கொண்டு உரிமையாளர்களிடம் செல்போன்களை நேரில் ஒப்படைத்தார். எஸ்பி எஸ்.ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பிக்கள் கோபி, செல்வன், சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.