கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள செட்டிநாடு குழும அலுவலகத்தில் வருமான வரிச் சோதனை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் செட்டிநாடு குழுமங்கள் செயல்பட்டு வருகின்றன. இக்குழுமங்கள் மீது அளிக்கப்பட்ட வரி ஏய்ப்புப் புகாரின் பேரில், இன்று (டிச. 9) காலை இருநூற்றுக்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள், ஒரே நேரத்தில் செட்டிநாடு குழும அலுவலகங்களில் திடீரென நுழைந்து அதிரடியாகச் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதன்படி கோவை மாநகர், ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள செட்டிநாடு பில்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் இயங்கும் அலுவலகத்தில், சோதனை தொடங்கியது. 15 வருமான வரித் துறை அதிகாரிகளைக் கொண்ட குழு, காலை 8 மணி முதல் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
அங்கிருந்து தகவல்கள் எதுவும் வெளியில் செல்லாதவாறு தடுக்கும் வகையில், அலுவலகத்தில் உள்ள அனைத்து ஊழியர்களின் செல்போன்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து அங்குள்ள ஆவணங்களைச் சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.