வைகோ: கோப்புப்படம் 
தமிழகம்

ஊராட்சி மன்றங்களுக்கு தமிழக அரசு நிதி தரவில்லை; பணிகள் முடங்கிவிட்டன: வைகோ குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

ஊராட்சி மன்றங்களுக்குத் தமிழக அரசு மானிய உதவிகள் வழங்காததால், பணிகள் முடங்கிவிட்டன என்று மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக, வைகோ இன்று (டிச.9) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாட்டில் ஊராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெற்று, வெற்றி பெற்றவர்கள் பொறுப்பேற்றுப் பத்து மாதங்கள் கடந்துவிட்டன. ஊராட்சி மன்றங்களுக்கு, மாநில நிதிக்குழு மானியம் வழங்கினால்தான், குடிநீர், மின்விளக்குப் பணிகளை மேற்கொள்ள முடியும். ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியும்.

ஆனால், பத்து மாதங்களாகியும், மானிய உதவிகள் இன்னமும் வழங்கப்படவில்லை. எனவே, மேற்கண்ட பணிகள் அனைத்தும் முடங்கிக் கிடக்கின்றன.

அது மட்டுமல்ல; மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் செய்யப்படும் வேலைகளுக்கு உரிய நிதியினையும் வழங்காமல் காலம் கடத்தி வருவது, மத்திய-மாநில அரசுகள் மீது மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றது.

எனவே, காலம் கடத்தாமல், மாநில நிதிக்குழு மானியத்தையும், மத்திய அரசாங்கத்தின் மூலம் வழங்கப்படும் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான நிதியினையும் மத்திய, மாநில அரசுகள் உடனே வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்".

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT