தமிழகம்

தூத்துக்குடி அனல்மின் நிலைய 5-வது அலகு மீண்டும் பழுது: 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

செய்திப்பிரிவு

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 5-வது அலகில் பரமாரிப்பு பணிகள் முடிந்து மின் உற்பத்தி தொடங்கிய ஒரு வாரத்தில் மீண்டும் பழுது ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே 3-வது அலகில் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால், மொத்தம் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 5 அலகுகள் மூலம் தலா 210 மெகாவாட் என மொத்தம் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த அனல்மின் நிலையத்தின் இயந்திரங்கள், கொதிகலன்கள் அனைத்தும் மிகவும் பழமையானது என்பதால் அடிக்கடி பழுது ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் 5-வது அலகு கடந்த ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதியும், 3-வது அலகு செப்டம்பர் மாதம் 8-ம் தேதியும் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலை யில் 2-வது அலகில் உள்ள ஜெனரேட்டர் மின்மாற்றியில் கடந்த 24-ம் தேதி திடீரென பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. ஒரே நேரத்தில் 3 அலகுகளில் மின் உற்பத்தி இல்லாததால் 630 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 2 அலகுகளுக்கு மேல் மின் உற்பத்தி நிறுத்தக்கூடாது என்பதற்காக 5-வது அலகில் பராமரிப்பு காலம் முடிவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாகவே கடந்த 25-ம் தேதி மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.

இந்நிலையில் 5-வது அலகில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் திடீரென பழுது ஏற்பட்டது. இந்த அலகில் 45 நாட்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அக்டோபர் 2-ம் தேதிதான் மின் உற்பத்தி தொடங்கியிருக்க வேண்டும்.

ஆனால், ஒரு வாரத்துக்கு முன்பாக செப்டம்பர் 25-ம் தேதி அவசர அவசரமாக பராமரிப்பு பணியை முடித்து மின் உற்பத்தியை தொடங்கினர். தற்போது ஒரு வாரத்துக்குள் மீண்டும் பழுது ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT