சேலம்-சென்னை இடையே எட்டு வழிச் சாலை அமைக்கும் திட்டம் தொடர்பான வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சேலம் மாவட்ட விவசாயிகள் வரவேற்றுள்ள அதேநேரம் சுற்றுச்சூழல் அனுமதி பெற்று திட்டத்தை தொடங்க தீர்ப்பில் உத்தரவிட்டிருப்பது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் வீரபாண்டி, பூலாவரி, நெய்க்காரப்பட்டி, ராமலிங்கபுரம், குள்ளம்பட்டி, குப்பனூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக எட்டு வழிச் சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டன.
இத்திட்டத்தால், விளை நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இத்திட்டத்தில் நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியிட்டதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தீர்ப்பில், எட்டு வழிச் சாலைக்காக விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தை அரசு நிலமாக வகை மாற்றம் செய்ய தடை விதித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை சேலம் மாவட்ட விவசாயிகள் வரவேற்று தங்கள் நிலங்களில் திரண்டு கைதட்டியும், பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.
அதேநேரம் இத்திட்டத்தை சுற்றுச்சூழல் துறை அனுமதி பெற்று, முறையாக புதிய அறிவிப்பை அரசு வெளியிடலாம் என உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருப்பது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக விவசாயிகள் மோகன சுந்தரம், நாராயணன், கவிதா ஆகியோர் கூறியதாவது:
உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தற்காலிகமாக விவசாய நிலங்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இத்திட்டத்தை முழுமையாக ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்த்தோம்.
ஆனால், சுற்றுச்சூழல் அனுமதி பெற்று மீண்டும் இத்திட்டத்தை தொடர வழி வகை செய்திடும் வகையில் தீர்ப்பு வழங்கியிருப்பது கவலை அளிக்கிறது.
விளை நிலங்களை அழிக்க சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்காது என நம்புகிறோம். இத்திட்டத்தை மத்திய அரசு மீண்டும் செயல்படுத்த முயற்சி செய்தால், நிலத்தை கையகப்படுத்த விடாமல் விவசாயிகள் போராட்டத்தை தொடருவோம். ஏற்கெனவே, உள்ள சாலைகளை விரிவாக்கம் செய்து, திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.