தமிழகம்

மழைநீர் கால்வாயில் விழுந்து உயிரிழந்த தாய், மகள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

செய்திப்பிரிவு

தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்தபோது மழைநீர் விபத்து ஏற்பட்டு மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகாலில் விழுந்து உயிரிழந்த தாய், மகள் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கி முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை அம்பத்தூரை அடுத்த அயனம்பாக்கத்தில் வசித்து வந்தவர் கரோலின் (45). இவர் தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றி வந்தார். இவரது மகள் ஈவிலின் (22). கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதை அடுத்து பொருட்கள் வாங்குவதற்காக நேற்று முன்தினம் (டிச.6) மாலை தனது மகளுடன் கரோலின் தனது இருசக்கர வாகனத்தில் கரோலின் சென்றுள்ளார். ஷாப்பிங் முடிந்து இரவு இருவரும் வீடு திரும்பியுள்ளனர்.

தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். நேற்று மாலை பெய்த மழையால் சாலையோரம் மழைநீர் வடிகாலில் தண்ணீர் தேங்கியிருந்தது. சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட இந்தப் பகுதியில் மதுரவாயல் புறவழிச் சாலைக்கும், இணைப்புச் சாலைக்கும் இடையே 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமார் 10 அடி ஆழம், 3 அடி அகலத்திற்கு மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைந்துள்ளது.

அது முறையான பராமரிப்பின்றி, 3 அடி ஆழத்திற்குச் சேறும், சகதியும் நிரம்பிக் கழிவுநீரும் கலந்து ஓடுகிறது. சாலையை ஒட்டி இடது பக்கம் திறந்த நிலையில் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. சாலைக்குச் சமமாக மூடியில்லாமல் திறந்த நிலையில் சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு இந்த வடிகால் சாலையோரம் தொடர்ந்து வரும்.

அப்பகுதியில் உள்ள மழைநீர் வடிகாலில் தாய், மகள் இருவரும் விழுந்து கால்வாயில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உயிரிழந்த பேராசிரியைக்கு இன்னொரு மகள் இருக்கிறார்.

தந்தை ஏற்கெனவே இறந்த நிலையில் விபத்தில் தாயையும் சகோதரியையும் பறிகொடுத்துவிட்டு இளைய மகள் ஆதரவின்றி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு அப்பெண்ணைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் இன்று முதல்வருக்குக் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில் உயிரிழந்த பேராசிரியை குடும்பத்தினருக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று விடுத்துள்ள அறிக்கை:

“திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டம், ராஜன்குப்பம் பகுதியைச் சேர்ந்த எட்வின் என்பவரின் மனைவி கரோலின் பிரமிளா மற்றும் அவருடைய மகள் செல்வி ஈவிலின் கெசியா ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம்பட்டு கிராமம், நொளம்பூர் அருகே மழைநீர் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து வேதனை அடைந்து, அவருடைய குடும்பத்திற்கு நேற்று (7.12.2020) இரங்கல் தெரிவித்திருந்தேன்.

இந்நிலையில், கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்த கரோலின் பிரமிளா மற்றும் அவருடைய மகள் செல்வி ஈவிலின் கெசியா ஆகியோரது குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய், ஆக மொத்தம் 4 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT