படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
தமிழகம்

விவசாயிகளுக்கு ஆதரவாக மதுரையில் திமுக கூட்டணி கட்சியினர் சாலை மறியல், ஆர்ப்பாட்டம்: வர்த்தகர்கள் கடைகளை அடைத்து ஆதரவு- 420 பெண்கள் உள்பட 1172 பேர் கைது 

சுப.ஜனநாயகச் செல்வம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மதுரை மாவட்டத்தில் இன்று திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் சாலை மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் 420 பெண்கள் உள்பட 1172 பேர் கைது செய்யப்பட்டனர்.

வழக்கம்போல் போக்குவரத்து இயங்கியதால் மதுரையில் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பில்லை. புறநகர்ப் பகுதியில் 80 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன.

அதனையொட்டி தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட ஆகிய திமுக கூட்டணி கட்சிகளும், தொமுச, சிஐடியு, ஐஎன்டியுசி, ஏஐடியுசி, எச்எம்எஸ் உள்ளிட்ட 8 தொழிற்சங்கங்களும் புதுடெல்லியில் போராடும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் பொன் முத்துராமலிங்கம், கோ.தளபதி, ஆகியோர் தலைமையில் முன்னாள் மேயர் குழந்தைவேலு உள்பட கூட்டணிக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதில் 350-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பாண்டிபஜாரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் ரா.விஜயராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதேபோல், அவனியாபுரம் மந்தைதிடலில் சிபிஐ தாலுகா செயலாளர் சேதுராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சி்நதாமணியில் திமுக கிளை செயலாளர் தனபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை ஐகோர்ட் கிளை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ராஜூசெல்லம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி சார்பில் நிர்வாகி சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதேபோல், பாண்டிபஜாரில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மத்திய தெற்கு மாவட்ட செயலாளர் மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பரங்குன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறப்பினர் இளங்கோவன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 72 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சமயநல்லூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய் தலைமையில் சாலைமறியல் நடைபெற்றது.

புறநகரில் மேலூர், சோழவந்தான், விக்கிரமங்கலம், அலங்காநல்லூர், உசிலம்பட்டி, திருமங்கலம், கள்ளிக்குடி, ஊமச்சிகுளம், நாகமலை புதுக்கோட்டை, ஒத்தக்கடை உள்ளிட்ட 15 இடங்களில் மறியல் நடைபெற்றது.

இதில், 420 பெண்கள் உள்பட 1100 பேர் கைது செய்யப்பட்டனர். மாநகரில் 100 பேர் உள்பட மொத்தம் 1172 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில், அலங்காநல்லூர், ஊமச்சிகுளம் உள்ளிட்ட புறநகர் பகுதியில் வியாபாரிகள் கடையடைப்பு செய்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

மதுரையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பில்லை, புறநகரில் ஓரளவு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

SCROLL FOR NEXT