தமிழகம்

வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பாரத் பந்த்: தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

செய்திப்பிரிவு

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் 13 நாட்களாக முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்கள் அறிவித்த பாரத் பந்த்துக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் இன்று போராட்டம் நடத்தின.

மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்தது. பலத்த எதிர்ப்புக்கிடையே நாடாளுமன்றத்தில் அதை நிறைவேற்றியது. அதை எதிர்த்து கிளர்ந்தெழுந்த பஞ்சாப், ஹரியாணா, உ.பி. உள்ளிட்ட மாநில விவசாயிகள் டெல்லியில் திரண்டு முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 13-வது நாளாக இன்றும் கடுங்குளிரில் போராட்டம் தொடர்கிறது.

விவசாயிகளின் போராட்டத்திற்கு இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள், கலையுலகினர் எனப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தங்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கத் தலைநகரில் குவிந்துள்ள விவசாயிகளுடைய பேரணியின் நீளம் 80 கிலோ மீட்டர். ஏறத்தாழ 96 ஆயிரம் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் 1 கோடியே 2 லட்சம் விவசாயிகள் தொடர்ச்சியாகப் போராடி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அளவில் மிகப்பெரிய போராட்டம் உலக கவனத்தை ஈர்த்து வருகிறது. போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார். போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு எடுத்த முயற்சிகள் தோல்வியைத் தழுவிய நிலையில், பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.

அரசுத் தரப்பிலிருந்து விவசாயப் பிரதிநிதிகளுடன் தொடர்ச்சியாக நடந்த பேச்சுவார்த்தைகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. வேளாண் திருத்தச் சட்டங்களையும் மின்சாரத் திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவேண்டும் என விவசாய சங்கங்கள் வலியுறுத்தின.

மத்திய அரசின் 3 வேளாண் திருத்தச் சட்டங்களையும், மின்சாரத் திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெறக் கோரும் விவசாயிகளின் நாடு தழுவிய முழு அடைப்பிற்கு திமுகவும், தோழமைக் கட்சிகளும் முழு ஆதரவை வழங்குவதாக அக்கட்சியின் தலைவர்கள் தெரிவித்தனர்.

“விவசாயிகள் பிரச்சினைதானே, அரசாங்கம் பார்த்துக் கொள்ளட்டும் என நாம் அலட்சியமாக இருந்துவிட முடியாது. பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் இதில் பங்கு உள்ளது. ஏனெனில், உணவளித்து நம் உயிர் வளர்ப்பவர்கள் உழவர்கள். அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு, நம் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் தனிப்பட்ட பாதிப்பு. ஒட்டுமொத்தமாக நாட்டுக்கே பேரிழப்பு” என்று கூறிய ஸ்டாலின், முழு அடைப்பில் பங்கேற்க பொதுமக்களுக்கும், திமுக தொண்டர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

இன்று நாடு தழுவிய முழு அடைப்பை ஆதரித்து தமிழக எதிர்க்கட்சிகள் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துகின்றன.

சாலை மறியல், ஆர்ப்பாட்டம், கதவடைப்பு எனப் போராட்டம் நடக்கிறது. திமுக அதன் தோழமைக் கட்சிகள் சார்பில் மாவட்டம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. சென்னையில் திமுக, அதன் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து சென்னை பாரிமுனை உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி, டெல்டா மாவட்டங்களில் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக உள்ளிட்ட தோழமைக் கட்சியினர் திரண்டு பேரணி, ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து வருகின்றனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கோவையில் திரண்டு நின்று விவசாயிகள் போராட்டத்துக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். தமிழகத்தின் பல மாவட்டங்களில் வர்த்தக நிறுவனங்கள், வர்த்தகர்கள், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் கடையடைப்பு, வேலை நிறுத்தம் செய்தனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் இன்றைய பொது முடக்கத்துக்கு ஆதரவாக தனது ஆதரவை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு:

“உழவே தலை என்கிறது வள்ளுவம். ஆனால், இங்கு தலையே நிலை குலைகிறது!

உயிர் கொடுக்கும் உழவரின் உயிரையே விலை பேசும் மூன்று வேளாண் சட்டங்கள்!

உழவு என்பது தொழில் மட்டுமல்ல. நம் அனைவரின் உரிமை!

#StandWithFarmers என நடைபெறும் #BharatBandh வெல்லட்டும்! மூன்று சட்டங்களும் நொறுங்கட்டும்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT