போராட்டத்தில் கலந்துகொண்ட கே.என்.நேரு. 
தமிழகம்

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு: திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட 400க்கும் அதிகமானோர் கைது

ஜெ.ஞானசேகர்

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, திருச்சியில் இன்று சாலை மறியலில் ஈடுபட்ட திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் 400க்கும் அதிகமானோரை போலீஸார் கைது செய்தனர்.

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், டிச.8-ம் தேதி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட பல்வேறு அரசியல் கட்சிகளும் அவற்றைச் சார்ந்த தொழிற்சங்கங்களும், பல்வேறு அமைப்புகளும் ஏற்கெனவே அழைப்பு விடுத்திருந்தன.

இதன்படி, திருச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதியில் பெரியார் சிலை அருகே இன்று (டிச.8) சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, போராட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய, தமிழக அரசுகளைக் கண்டித்தும் மறியலில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், மக்கள் அதிகாரம், திராவிடர் கழகம், சிஐடியூ, ஏஐடியூசி, ஐஎன்டியூசி, தொமுச, மக்கள் கலை இலக்கியக் கழகம், எல்ஐசி முகவர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவர் சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்த 30 பெண்கள் உட்பட 400க்கும் அதிகமானோரை போலீஸார் கைது செய்தனர்.

போராட்டத்தைத் தொடங்கி வைத்துவிட்டு புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களிடம் கே.என்.நேரு கூறுகையில், "வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். அதுவரை இந்தப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும்" என்றார்.

மேலும், தான் ஒரு விவசாயி என்று கூறும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை அரசியலுக்காக எதிர்க்கின்றனர் என்றும் கூறிய கருத்து குறித்த செய்தியாளரின் கேள்விக்கு, "அவர் இருக்கும் இடம் அப்படி. அவருக்கு வேறு வழியில்லை. எனவே, ஆதரவு தெரிவிக்கிறார். ஆதரவு தெரிவிக்கவில்லையெனில் அவர் அந்த இடத்தில் இருக்க முடியாது" என்றார்.

இந்தப் போராட்டத்தால் மத்திய பேருந்து நிலையப் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல், திருச்சி மாவட்டத்தில் சோமரசம்பேட்டை, உப்பிலியபுரம், மணப்பாறை, துறையூர், தாத்தையங்கார்பேட்டை, லால்குடி உட்பட பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

SCROLL FOR NEXT