கடலூர் மாவட்டத்தில் 6-வதுநாளாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்புகளில் தண்ணீர் வடியாததால் பொதுமக்கள் அவதிய டைந்துள்ளனர்.
'புரெவி' புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 6 தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று மழை சற்று குறைந்திருந்தது. கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம் உள்பட மாவட் டத்தின் அனைத்து பகுதிகளிலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சுமார் 1 லட்சம் ஏக்கருக்கு மேல் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும்அவதியடைந்து வருகின்றனர். பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். பலர் முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கெடிலம், தென்பெண்ணை, பழைய கொள்ளிடம், கான்சாகிப் வாய்க்கால் உள்ளிட்ட ஆறுகளில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மாவட்டத்தில் உள்ளகுளம், குட்டைகள் நிரம்பியுள்ளன. வெள்ளநீரை வெளியேற் றுவதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் வடியாமல் தேங்கி உள்ளதால் பெரும்பாலான பகுதிகள் தொடர்ந்து தீவுகளாக காட்சியளிக்கின்றன.
மழையளவு
நேற்றைய மழையளவு லால்பேட்டை 60.8 மிமீ, காட்டுமன்னார்கோவில் 54.4 மிமீ, அண்ணாமலைநகரில் 26.8 மிமீ, கடலூரில் 17.6 மிமீ, சிதம்பரத்தில் 17 மிமீ, பரங்கிப்பேட்டையில் 16 மிமீ, முஷ்ணத்தில் 14.1 மிமீ, புவனகிரியில் 13 மிமீ, விருத்தாசலத்தில் 12.3 மிமீ, குறிஞ்சிப்பாடியில் 12.3 மிமீ மழை பதிவாகியுள்ளது.