ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் 4 வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு முதல்வர் ஜெயலலிதா உட்பட 31 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி முதல்வர் பதவியை ஏற்ற ஜெயலலிதா, சென்னை ஆர்.கே.நகர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத்தேர்தலில் ஜெய லலிதா வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி சேலம் மாவட்டம் ஆத்தூர் முல்லைவாடி கிராமத்தைச் சேர்ந்த டி.சுரேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவில் அவர் கூறியிருந்ததாவது:
கடந்த ஜூன் 27-ம் தேதி நடந்த இடைத் தேர்தலுக்காக ஜூன் 8-ம் தேதி மனு தாக்கல் செய்தேன். அந்த மனு ஜூன் 11-ம் தேதி பரிசீலனைக்கு எடுத் துக்கொள்ளப்பட்டது. சரிவர முன்மொழியப்படவில்லை என்று கூறி எனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்தார். விதிமுறைகளை முறையாகப் பின்பற்றியும் என் மனு நிராகரிக் கப்பட்டதால், உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தேன். நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்து, தேர்தல் வழக் காகத் தொடர உத்தரவிட்டது. அதன்படி தேர்தல் வழக்கு தொடர்ந்தேன்.
எனது வேட்புமனுவை முன் மொழிந்த விக்னேஷ் முகவரியில் இளையமுதலி என்பதற்கு பதிலாக இளையமுதல் என்று இருப்பதாக கூறி மனு நிராகரிக் கப்பட்டது. இதை காரண மாகக் கூறி எனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது முறையற் றது, செல்லாது, சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும். இத்தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றது செல்லாது என்றும் அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி இந்த மனு தொடர்பாக 4 வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு முதல்வர் ஜெயலலிதா, இந்திய தேர்தல் ஆணையர், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி உள்ளிட்ட 31 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
டிராபிக் ராமசாமியின் மனு
ஆர்.கே.நகர் இடைத்தேர் தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியும் இது தொடர்பாக ஒரு மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம் நடந்ததால், இத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார். அந்த மனுவும் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ஆஜராகாததால், விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.