காரைக்காலில் இன்று (டிச.7) மாலை புதுச்சேரி நலத்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் எம்.கந்தசாமி வந்த வாகனத்தை ரேஷன் கடை ஊழியர்கள் மறித்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 70 கூட்டுறவு ரேஷன் கடைகளில் 120 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். புதுச்சேரியில் இலவச அரிசிக்குப் பதிலாக பணம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டதால் ரேஷன் கடைகள் மூடப்பட்டதோடு, ஊழியர்களின் பணியும் கேள்விக்குறியானது.
இந்நிலையில் கடந்த 38 மாதங்களாக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும், ரேஷன் கடைகளைத் திறக்க வேண்டும் அல்லது ஊழியர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர்ந்து பலகட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காரைக்கால் ஜெயப்பிரகாஷ் நாராயண் கூட்டுறவு நூற்பாலை ஊழியர்களின் கோரிக்கைகள், பிரச்சினைகள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமைச்சர் எம்.கந்தசாமி இன்று மாலை காரைக்கால் வந்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்ற அமைச்சரைக் காரைக்கால் ஆட்சியர் அலுவலகம் அருகே அம்பேத்கர் சாலையில் காத்திருந்த ரேஷன் கடை ஊழியர்கள் மறித்து முற்றுகையிட்டனர்.
உடனடியாக வாகனத்திலிருந்து இருந்து இறங்கிய அமைச்சர் எம்.கந்தசாமியிடம், ஊழியர்கள் 38 மாத ஊதிய நிலுவையை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். அங்கு கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது.
அப்போது அமைச்சர் கூறும்போது, ''முன்னாள் முதல்வர் ரங்கசாமி ஆட்சியின்போதே ஒன்றரை ஆண்டுகால ஊதிய நிலுவை இருந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் சரிசெய்து, ரேஷன் கடையை முறையாக நடத்த முயன்றபோது துணைநிலை ஆளுநர் ஒத்துழைப்புத் தரவில்லை.
மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டாலும், புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மூடப்பட்டிருப்பதால் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை. ரேஷன் கடையைத் திறந்து நடத்த துணைநிலை ஆளுநர் எந்த வகையிலும் ஒத்துழைப்புத் தர மறுக்கிறார். பல்வேறு கோரிக்கைகளுடன், ஒரு வாரத்தில் துணைநிலை ஆளுநரைச் சந்திக்க உள்ளேன்.
சாதகமான நடவடிக்கை இல்லை என்றால், அமைச்சர் பதவியைப் பற்றிக் கவலைப்படாமல், நானும் போராட்டத்தில் ஈடுபடுவேன். ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளின் பக்கமே நான் உள்ளேன்’’ என்றார்.
பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படாத நிலையில், ஆட்சியரகம் செல்ல முற்பட்ட அமைச்சரை ஊழியர்கள் இடைமறித்தனர். போலீஸார் அவர்களை அப்புறப்படுத்திய நிலையில் அமைச்சர் புறப்பட்டுச் சென்றார். ஆனாலும் ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் சிலர், பேச்சுவார்த்தைக்கு ஆட்சியரகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக அமைச்சர் முற்றுகையிடப்பட்ட நிலையில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.