தமிழகம்

தமிழகத்தில் காவல்துறை ஆணையம் எப்போது அமைக்கப்படும்?- அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

கி.மகாராஜன்

தமிழகத்தில் காவல்துறை ஆணையம் எப்போது அமைக்கப்படும் என்பதை தெரிவிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூரைச் சேர்ந்த மாசிலாமணி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் போலீஸார் அனைத்து கால நிலைகளிலும் 24 மணி நேரம் இடைவிடாமல் பணிபுரிகின்றனர்.

தமிழகத்தில் பொதுமக்கள்- போலீஸ் விகிதம் ஆயிரம் பேருக்கு 2 பேர் என உள்ளது. போலீஸாருக்கு மத்திய பிரதேசத்தில் ரூ.38 ஆயிரம், உத்திரபிரதேசத்தில் ரூ.40 ஆயிரம், மேற்கு வங்காளத்தில் ரூ.28500, மகாராஷ்டிராவில் ரூ.29 ஆயிரம் முதல் 34 ஆயிரம் வரை மாதச் சம்பளம் வழங்கப்படுகிறது. ஏழை நாடான உகண்டாவில் கூட ரூ.47 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது.

ஆனால் தமிழகத்தில் மழை வெயில் போன்றவற்றை பாராமல் பணிபுரியும் போலீஸ்காரர்களுக்கு ரூ.18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது.

தமிழக போலீஸார்களில் 90 சதவீதம் பேர் சொந்த ஊர்களிலிருந்து வெகு தொலைவில் பணிபுரிகின்றனர். இதனால் அவர்களுக்கான ஊதியம் போதுமானதாக இல்லை. எனவே தமிழகத்தில் போலீஸாரின் ஊதியத்தை உயர்த்தவும், போலீஸாரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் காலிப்பணியிடங்களை நிரப்பவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், போலீஸார் இல்லாமல் ஒரு மணி நேரம் கூட இருக்க முடியாது. சில நிகழ்வுகள் காவல்துறையினருக்கு எதிராக இருந்தாலும் போலீஸார் நமக்கு தேவை. உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் போலீஸார் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.

இதனால் காவல்துறையினர் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன?, காவல் துறையினருக்கு சரியான நேரங்களில் பதவி உயர்வு வழங்கப்படுகிறதா?, காவல்துறையில் எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளது?, காவல் துறையினருக்கு தமிழகத்தில், பிற மாநிலங்களில் எவ்வளவு ஊதியம் வழங்கப்படுகிறது?, காவல் துறையினருக்கு என சிறப்பு காப்பீடு செய்யப்பட்டுள்ளதா?, 2013-ல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுபடி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் காவல்துறை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதா? அமைக்கப்படவில்லை என்றால் எப்போது ஆணையம் அமைக்கப்படும்?, தமிழகத்தில் எத்தனை போலீஸார் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்? என்ற கேள்விக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிச.17-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT