தமிழகம்

வேகக்கட்டுப்பாடு, ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவற்றில் ஊழல்; டிச.27 முதல் வேலைநிறுத்தம்: தென்மண்டல லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

வி.சீனிவாசன்

தமிழகத்தில் வரும் 27-ம் தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக, தென்மண்டல லாரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சண்முகப்பா தெரிவித்துள்ளார்.

சேலத்தில் தென்மண்டல லாரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சண்முகப்பா இன்று கூறியதாவது:

''தமிழகத்தில் குறிப்பிட்ட நிறுவனங்களின் வேகக்கட்டுப்பாட்டுக் கருவி, ரிஃப்ளக்டர், ஸ்டிக்கர் மற்றும் ஜிபிஎஸ் கருவிகளை வாங்கி லாரிகளில் பொருத்தினால்தான், வாகனத்தைப் புதுப்பிக்க முடியும் என அதிகாரிகள் நிர்பந்தித்து வருகின்றனர். இந்த வேகக்கட்டுப்பாட்டுக் கருவி அண்டை மாநிலங்களில் ரூ.1500க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் குறிப்பிட்ட எட்டு நிறுவனங்களின் கருவிகளை ரூ.10 ஆயிரம் கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.

இதேபோல, ரிஃப்ளக்டர், ஸ்டிக்கர்கள் வெளி மாநிலங்களைக் காட்டிலும், இங்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதில் பலவகையான ஊழல் தமிழகத்தில் நடக்கிறது. இது சம்பந்தமாக போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டும், எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதிக லோடு ஏற்றிச் செல்லும் லாரிகளைப் பிடிக்கும் பிற மாநில அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்கின்றனர். ஆனால், தமிழகத்தில் அதிக லோடு ஏற்றிச் செல்லும் வாகனங்களைப் பிடித்து, லஞ்சம் வாங்கிக் கொண்டு அதிகாரிகள் விட்டுவிடுகின்றனர். கரோனா தொற்றால் அண்டை மாநிலங்களில் காலாண்டு வரி ரத்து செய்துள்ளதைப் போன்று, தமிழகத்திலும் வரி ரத்து செய்ய வேண்டும் எனப் பல முறை கோரிக்கை மனு அளித்துள்ளோம்.

ஆனால், எந்தக் கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுக்கு இரண்டு வாரம் அவகாசம் கொடுத்துள்ளோம். கோரிக்கைக்ள் நிறைவேற்றப்படவில்லை என்றால், வரும் 27-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள் சங்கம் ஈடுபடும். இதனால், மாநிலம் முழுவதும் 4.5 லட்சம் லாரிகளும் பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கும் வரும் லாரிகளும் நிறுத்தப்படும்.

வேளாண் திருத்தச் சட்ட மசோதாவை வாபஸ் பெற வலியுறுத்தி விவசாயிகள் நாளை (8-ம் தேதி) நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள் சங்கம் பங்கேற்கிறது. இதனால், நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மாநிலம் முழுவதும் லாரிகள் இயங்காது''.

இவ்வாறு சண்முகப்பா தெரிவித்தார்.

அப்போது மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் குமாரசாமி, செயலாளர் வாங்கிலி, பொருளாளர் தன்ராஜ், மாவட்டத் தலைவர் கிருஷ்ணசாமி உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT