தமிழகம்

பரோல் முடிந்து பேரறிவாளன் புழல் சிறை திரும்பினார்; நிரந்தர விடுதலைக்காக அற்புதம்மாள் கோரிக்கை

ந. சரவணன்

பரோல் முடிந்த நிலையில் பேரறிவாளன் சென்னை புழல் சிறைக்குப் பலத்த பாதுகாப்புடன் இன்று அழைத்துச் செல்லப்பட்டார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கியது.

இதைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் மாதம் 9-ம் தேதி பேரறிவாளன், திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார். வீட்டில் இருந்தபடியே மருத்துவச் சிகிச்சைக்காக பேரறிவாளன் கிருஷ்ணகிரி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றார். இதனால், பேரறிவாளனின் பரோல் காலம் மேலும் நீடிக்கப்பட்டது.

இந்நிலையில், பரோல் காலம் முடிவடைந்து இன்று மதியம் அவர் மீண்டும் புழல் சிறைக்குத் திரும்பினார். இதையொட்டி, திருப்பத்தூர் மாவட்டப் பொருளாதார குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் பிரவீன்குமார் தலைமையில், கந்திலி காவல் ஆய்வாளர் உலகநாதன் மற்றும் 15-க்கும் மேற்பட்ட காவலர்கள் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தனர்.

ஜோலார்பேட்டை சுகாதாரத்துறையினர் இன்று காலை 11 மணியளவில் பேரறிவாளன் வீட்டுக்கு வந்து அவருக்குக் கரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து, பகல் 1 மணியளவில் பேரறிவாளன் பலத்த பாதுகாப்புடன் தனி வாகனத்தில் சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறும்போது, ''என் மகன் பேரறிவாளனுக்கு சிறுநீரகத் தொற்று, மூட்டு வலி, நரம்பியல் உள்ளிட்ட பல்வேறு உடல் சார்ந்த பிரச்சினைகள் இருக்கின்றன. இதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ளவே பேரறிவாளன் பரோலில் வந்தார். தனியார் மருத்துவமனைகளில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. கடைசியாக விழுப்புரத்தில் சிறுநீரகத் தொற்று காரணமாக 2 நாட்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார். அவருக்கு 1 மாதத்துக்கான மருந்து, மாத்திரைகளை மருத்துவர்கள் வழங்கியுள்ளனர்.

அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் பேரறிவாளனுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கான நேரம் தற்போது இல்லை என்பதால் பேரறிவாளன் சிறைக்குத் திரும்பியுள்ளார். என் கணவர் குயில்தாசனின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. பரோலில் வந்த பேரறிவாளன் தனது தந்தையை 2 முறை நேரில் சந்தித்தார். அதற்கு மேல் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. வயதான காலத்தில் எங்களுக்கு இருக்கும் ஒரே ஆதரவு பேரறிவாளன்தான், எனவே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியபடி என் மகனை நிரந்தரமாக விடுதலை செய்யத் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

பரோல் காலம் முடிவடைந்ததால் பேரறிவாளனை சென்னை புழல் சிறையில் அடைக்கப் பலத்த பாதுகாப்புடன் காவல் துறையினர் அழைத்துச்சென்றனர்.

SCROLL FOR NEXT