புதுச்சேரியில் அமைச்சர்கள் மழையில் வெளியே வரவே இல்லை என்று கூட்டணிக் கட்சியான திமுக கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசின் கூட்டணிக் கட்சியான திமுக, காங்கிரஸைக் கடுமையாகத் தொடர்ந்து விமர்சித்து வருகிறது.
இந்நிலையில் திமுக தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்எல்ஏ இன்று வெளியிட்ட அறிக்கை:
"புதுச்சேரியில் புயல், மழையால் அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதுவரை அரசு சார்பில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து எந்தவிதமான கணக்கெடுப்பும் நடத்தப்படவில்லை. விவசாயப் பயிர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்திற்கான ப்ரீமியம் முழுவதையும் அரசே செலுத்தும் என்று முதல்வரால் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு செலுத்தவில்லை. இந்த ஆண்டிற்கான காப்பீடு ப்ரீமியம் செலுத்துவதற்கான காலம் கடந்த மாதம் 25-ம் தேதி, அதாவது நிவர் புயலுக்கு முன்பே முடிந்துவிட்டது. இதனால் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்குமா என்றும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
வருவாய்த்துறை அமைச்சர், உள்ளாட்சித்துறை அமைச்சர் உள்ளிட்ட எந்த அமைச்சர்களும் புயல் மற்றும் மழையின்போது வெளியே வரவில்லை. சில அமைச்சர்கள், சில நேரங்களில் தங்கள் தொகுதிகளைத் தாண்டி வெளியே வரவில்லை. அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் புயல் மற்றும் மழையால் புதுச்சேரியில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டிருக்க வேண்டும். அதேபோல் சேத விவரங்களைச் சேகரிக்க வேண்டும் என்று முதல்வரும் உத்தரவு பிறப்பிக்கவில்லை. இதனால் புதுச்சேரியில் புயல் மற்றும் கனமழையால் சேதமான பயிர்கள், மீன்பிடித் தளங்கள், மின்சாரப் பொருட்கள், சாலைகள் உள்ளிட்ட எவை குறித்தும் கணக்கு ஏதும் இல்லை. இந்நிலையில் மத்தியக் குழுவினர் புதுச்சேரி வந்து பார்வையிட்டுள்ளனர்.
அவர்களிடம் சேத விவரத்தைப் புதுச்சேரி அதிகாரிகள் புள்ளிவிவரங்களுடன் எப்படி விளக்கியிருக்க முடியும்? உரிய விவரத்தை அளித்தால்தானே மத்திய அரசிடம் இருந்து நிவாரணத்தைக் கேட்டு வலியுறுத்த முடியும். எனவே, மத்தியக் குழுவிடம் சேத விவரத்தைத் தெரிவித்து நிவாரணம் பெறும் நடவடிக்கையிலும் இந்த அரசு தவறிவிட்டதாகவே தெரிகிறது.
இதனால் உடனடியாக மீனவர்களுக்கும், சேதமான கட்டிடங்களுக்கும், நீர் புகுந்த வீடுகளுக்கும் தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். இந்த அரசின் பதவிக்காலம் முடிவடையும் நிலைக்கு வந்துள்ளது. ஆனால் இதுவரை ஒருமுறைகூட இயற்கைச் சீற்றங்களால் பாதிப்பிற்குள்ளான புதுச்சேரி மக்களுக்கு இந்த அரசால் நிவாரணம் வழங்கப்படவில்லை".
இவ்வாறு சிவா குற்றம் சாட்டியுள்ளார்.