தமிழகம்

சுற்றுலாப் பயணிகளைக் கவர மதுரை தெப்பக்குளத்தில் மீண்டும் படகு போக்குவரத்து: கைவிடப்பட்ட திட்டம் மீண்டும் புத்துயிர் பெறுமா?

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயில் படகுப் போக்குவரத்து திட்டத்தை தற்போது தொடங்குவதற்கு சரியான தருணம் ஏற்பட்டுள்ளதால் அந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தென்தமிழகத்தில் முக்கிய ஆன்மிக சுற்றுலாத்தலமான மதுரையில் அனைவரையும் கவர்ந்த இடம் வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம்.

கடந்த காலத்தில் இயல்பாக மழைநீரும், வைகை ஆற்று நீரும் இந்த குளத்திற்கு வந்ததால் ஆண்டு முழுவதுமே தண்ணீர் நிறைந்து காணப்பட்டது.

மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் சார்பில் படகுப் போக்குவரத்தும் விடப்பட்டதால் உள்ளூர் மக்கள், சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று தெப்பக்குளித்தின் ரம்மியமான அழகை கண்டு ரசித்தனர்.

அதன்பின் நீர்வரத்துப் பாதைகள் ஆக்கிரமிப்பட்டும், அடைக்கப்பட்டும் விட்டதால் கடந்த கால் நூற்றாண்டாக தெப்பக்குளம் தண்ணீர் வராமல் நிரந்தரமாக வறண்டு போய்க்கிடந்தது. படகுப் போக்குவரத்தும் கைவிடப்பட்டது.

கடந்த ஆண்டு ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் வைகை ஆற்றில் இருந்து சுரங்கப் பாதைகள் வழியாக இந்த தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

தற்போது ஆற்றில் தண்ணீர் வந்தால் தெப்பக்குளத்தில் அந்த தண்ணீர் நிரப்பப்படுகிறது. அதனால், ஆண்டில் 3 முதல் 5 முறையாக தெப்பக்குளம் நிரம்பிவிடுகிறது.

ஆனால், நிரம்பிய வேகத்தில் தண்ணீர் வற்றியும் விடுவதால் உள்ளூர் மக்களும், சுற்றுலாப்பயணிகளும் தண்ணீர் கடல்போல் நிரம்பிய தெப்பக்குளத்தை ஆண்டு முழுவதும் காண முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையால் வைகை ஆற்றில் இருந்து வந்த தண்ணீரால் மீண்டும் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் நிரம்பியுள்ளது.

உள்ளூர் மக்கள், தினமும் ஆர்வமாக சென்று பார்த்து பரவசம் அடைந்து வருகின்றனர். காலை, மாலை நேரங்களில் உள்ளூர் மக்கள் அதிகளவு இந்த தெப்பக்குளத்தை சுற்றி திரள்கின்றனர்.

அதனால், வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் தற்போது மாலை நேரங்களில் ஒரு சிறிய சென்னை மெரீனா பீச் போல் களைக்கட்டத் தொடங்கிவிட்டது.

மக்கள் வருகை அதிகரிப்பால் கரேனாவால் வாழ்வாதாரத்தை இழந்துதவித்த சிறு, குறு வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள் தெப்பக்குளத்தைச் சுற்றிலும் கடைகள் அமைத்து உற்சாகமாக வியாபாரம் செய்யத் தொடங்கிவிட்டனர்.

மாநகராட்சி நிர்வாகம், இந்து அறநிலையத்துறை மற்றும் சுற்றுலாத் துறையுடன் சேர்ந்து ஏற்கெனவே இந்த தெப்பக்குளத்தில் உள்ளூர் மக்களையும், சுற்றுலாப் பயணிகளையும் கவர மீண்டும் படகுப் போக்குரவத்து விடுவதற்கு ஏற்பாடு செய்திருந்தது.

அதற்காக படகுகள் வாங்கவும் நடவடிக்கைகள் மேற்கொண்டது. ஆனால், தண்ணீர் நிரம்பாமல் நிரந்தரமாக தெப்பக்குளம் வறண்டுபோய் காணப்பட்டதால் படகுப் போக்குவரத்துத் திட்டம் தள்ளிப்போனது.

தற்போது நிரந்தரமாக வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதால் தெப்பக்குளத்தில் ஆண்டில் பெருமான நாட்களில் தண்ணீர் நிரம்பி காணப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

அதனால், மாநகராட்சி நிர்வாகம், தெப்பக்குளத்தில் படகுவிடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என உள்ளூர் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த தள்ளுவண்டி வியாபாரி மூர்த்தி கூறுகையில், "எந்த பொழுதுபோக்கு அம்சமும் இல்லாமலேயே தண்ணீர் இருக்கிறதோ இல்லையோ தெப்பக்குளத்தில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து விடுகின்றனர்.

அதுவும் குடும்பமாக வந்து சென்று பொழுதுப்போக்கி செல்கின்றனர். படகுப்போக்குவரத்துவிட்டால் தெப்பக்குளமும் முறையாக பராமரிக்க ஏற்பாடு செய்யப்படும்.

தண்ணீரையும் நிரந்தரமாக தேக்குவதற்கு மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்கும். வண்டியூர் தெப்பக்குளத்தின் பராம்பரியமும் பாதுகாக்கப்படும்.

ஏற்கெவே அருகில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் எஸ்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கு இந்தத் தெப்பக்குளத்தில் படகுப்பயிற்சி வழங்கப்படுவதால் படகுப்போக்குவரத்து விடுவதில் எந்த சிக்கலும் இருக்காது, ’’ என்றார்.

SCROLL FOR NEXT