தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மார்ச் மாதம் மூடப்பட்ட கல்லூரிகள், 8 மாதங்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டன. இளநிலை இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் உற்சாகத்துடன் கல்லூரிக்கு வந்தனர்.
கரோனா தொற்று இந்தியாவில் பரவத் தொடங்கியவுடன் கடந்த மார்ச் 24 அன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பொதுமக்கள் வெளியில் செல்வது தடை செய்யப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் பின்னர் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பிய நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், சுற்றுலாத் தலங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டது.
ஆனாலும் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கல்லூரிகள் திறப்பு குறித்து தமிழக அரசு அறிவித்தது. கடந்த 2-ம் தேதி முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கான கல்லூரிகள் திறக்கப்பட்டன. இளநிலை அறிவியல், கலைக்கல்லூரி மாணவர்களுக்கான கல்லூரி இறுதியாண்டு வகுப்புகள் 7-ம் தேதி திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.
அதன் அடிப்படையில் இன்று, கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகள், வேளாண், கால்நடைக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை இறுதி ஆண்டு வகுப்புகள் இன்று திறக்கப்பட்டன. இறுதியாண்டு தவிர பிற மாணவர்களுக்குத் தொடர்ந்து இணைய வழியே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை வகுப்புகளும் இன்று முதல் செயல்படுகின்றன.
இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளவர்களுக்கான வகுப்புகள் 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளது. கல்லூரிகள் திறக்கப்படும் அதே நேரத்தில் கல்லூரி விடுதிகளும் இன்று முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இன்று கல்லூரி திறக்கப்பட்ட நிலையில் கல்லூரிக்கு வரும் மாணவர்களுக்கு அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறை அடிப்படையில் உடல் வெப்பப் பரிசோதனை, முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். சென்னையில் கல்லூரிக்கு வரும் மாணவர்கள் பேருந்துகளில் குழுவாகக் கூடி பொதுமக்களுக்கு இடையூறு செய்யாத வகையில் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளனர்.
கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி வாயிலில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஈரோடு மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவக் கல்லூரியாக 2018-ம் ஆண்டு மாற்றப்பட்ட பின்னரும், தனியார் கல்லூரிகள் அளவுக்கு கட்டணம் வசூலிக்கும் நடைமுறை தொடர்வதை எதிர்த்தே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.