தமிழகம்

மன்னார் வளைகுடாவில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு

செய்திப்பிரிவு

மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதிகாரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று பரவலாக மழை பெய்யும். ராமநாதபுரம் உள்ளிட்ட 4 தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறைந்து அதே இடத்தில் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

6-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் 10 செமீ,செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 7 செமீ, திருவாரூர் மாவட்டம் குடவாசல், நன்னிலம், நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஆகிய இடங்களில் 6 செமீ மழை பதிவாகியுள்ளது.

7-ம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதி, கேரள கடலோர பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 55 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசவாய்ப்பு உள்ளதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். வடதமிழக கடலோர பகுதிகளில் கோடியக்கரை முதல் பழவேற்காடு வரை, தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை கடல் அலை 1.5 மீட்டர் முதல் 3.4 மீட்டர் வரை எழும்பக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT