கொடைக்கானல் குணா குகை பகுதியை பார்வையிட்ட சுற்றுலாப் பயணிகள். 
தமிழகம்

கொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் மீண்டும் திறப்பு: ரம்மியமான சூழலில் இயற்கையை ரசித்த மக்கள்

செய்திப்பிரிவு

புரெவி புயல் முன்னெச்சரிக்கை யாக கொடைக்கானலில் மூடப்பட்டிருந்த சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.

புரெவி புயலால் கொடைக்கானல் மலைச் சாலையில் மண் சரிவு ஏற்பட வாய்ப்பிருந்ததால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன. தொடர் மழை காரணமாக கொடைக்கானல்-பழநி சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. அவை உடனடியாக அகற்றப்பட்டு சாலை சீரமைக்கப்பட்டது.

இந்நிலையில், புரெவி புயல் வலுவிழந்ததால் கொடைக்கானல் மலைப் பகுதியில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் கணிசமான சுற்றுலாப் பயணிகள் விடுமுறைதினமான நேற்று கொடைக்கான லுக்கு வந்தனர்.

மூடப்பட்டிருந்த சுற்றுலாத் தலங்களும் திறக்கப்பட்டன. இதனால் 12 மைல் சுற்றுச்சாலையில் உள்ள தூண் பாறை, குணா குகை, பைன் பாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை சுற்றுலாப் பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர்.

கொடைக்கானலில் மேகக்கூட்டங்கள் நேற்று இறங்கி வந்து சுற்றுலாப் பயணிகளை தழுவிச் செல்லும் வகையில் இதமான தட்பவெப்ப நிலை நிலவியது. மாலை 4 மணி அளவில் பலத்த மழை பெய்தது.

இப்பகுதியில் வெப்பநிலை நேற்று அதிகபட்சமாக 15 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக இரவில் 11 டிகிரி செல்சியசும் நிலவியது. காற்றில் ஈரப்பதம் 94% இருந்தது. இதனால் லேசான குளிர் காற்று வீசியது. அருவிகளில் கொட்டும் தண்ணீர், பசுமை வெளிகள் என ரம்மிய சூழலை சுற்றுலாப் பயணிகள் ரசித்தனர்.

SCROLL FOR NEXT