கோவை செட்டிப்பாளையம் அன்னை நகரில் உள்ள 100 அடி ஆழமுள்ள திறந்தவெளி கல்லுக்குழியை மூட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்.சுந்தரராஜன் கூறியதாவது: செட்டிப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட அன்னை நகரில் சுமார் 60 ஆண்டுகள் பழமையான திறந்தவெளி கல்லுக்குழி உள்ளது. இது சுமார் 100 அடி ஆழம், 200 மீட்டர் சுற்றளவு அகலம் கொண்டது. சுற்றிலும் குடியிருப்புகள், விவசாய நிலங்கள், வீட்டுமனைகள் உள்ளன. இந்த கல்லுக்குழியைச் சுற்றிலும் எவ்வித தடுப்புகளும் கிடையாது. புதிதாக வருவோருக்கு அபாய நிலையில் கல்லுக்குழி இருப்பதே தெரியாது. மழைக் காலங்களில் வெள்ளம் நிரம்பி சேறும், சகதியுமாகக் காணப்படும்.
இந்த ஆபத்தான திறந்தவெளி கல்லுக்குழியை மூட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியாவது குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள இந்த கல்லுக்குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சுற்றிலும் தடுப்புகள் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.