மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை குடிசை பகுதி மக்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் இலவச உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் கே.பாண்டியராஜன் ஷெனாய் நகரில் உள்ள அண்ணா சமூக கூடத்தில் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் உடனிருந்தார். படம்: பு.க.பிரவீன் 
தமிழகம்

மழையால் பாதிக்கப்பட்ட 1,200 இடங்களில் குடிசைப் பகுதி மக்களுக்கு இலவச உணவு விநியோகம்: அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்

செய்திப்பிரிவு

மழையால் பாதிக்கப்பட்ட1,200 இடங்களில் குடிசைப் பகுதியில் வாழும் மக்கள் மற்றும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வசிப்போருக்கு சென்னை மாநகராட்சி சார்பில், இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கே.பாண்டியராஜன் ஆகியோர் நேற்று தொடங்கிவைத்தார்.

‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ புயல்கள் காரணமாக சென்னையில் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக குடிசைப் பகுதிகள் மற்றும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதிகளில் அதிக அளவில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் 2 வாரங்களாக மக்கள் வெளியில் வர முடியாததால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களுக்கு 6 முதல் 13-ம் தேதி வரை ஒரு வாரத்துக்கு 3 வேளையும் இலவச உணவு வழங்குமாறு, சென்னை மாநகராட்சிக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.

இத்திட்டத்தின் தொடக்க விழா, ஷெனாய் நகர் அண்ணா சமூகநலக் கூடத்தில் நேற்று நடைபெற்றது. அதில் அமைச்சர் கே.பாண்டியராஜன் பங்கேற்று பொதுமக்களுக்கு உணவு வழங்கி, திட்டத்தை தொடங்கிவைத்தார்.

பின்னர் அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “சென்னையில் 1,200 இடங்களில் குடிசைப்பகுதி மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு 5 லட்சத்து 30 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 26 லட்சம் பேர் உள்ளனர். இவர்களுக்கு டிசம்பர் 13-ம் தேதி வரை 3 வேளையும் இலவச உணவுவழங்கப்பட உள்ளது. மொத்தம் 888 இடங்களில் இருந்து உணவு விநியோகிக்கப்பட உள்ளது. காலை 8 மணி, பகல் 12 மணி, இரவு 7 மணி ஆகிய நேரங்களில் உணவு விநியோகிக்கப்படும்” என்றார்.

ஆதம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஜெயக்குமார் பங்கேற்று பொதுமக்களுக்கு இலவச உணவு வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில் மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், மத்திய வட்டார இணை ஆணையர் பி.என்.தரன், தெற்கு வட்டாரதுணை ஆணையர் ஆல்பிஜான்வர்கீஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT