புயல் மழையால் பாதித்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நோய் தடுப்பு பணிகளை சென்னை பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று தொடங்கி வைத்தார். துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர். படம்: க.பரத் 
தமிழகம்

மழை பாதித்த பகுதிகளில் நோய் தடுப்பு பணிகள் தொடக்கம்: கரோனா தொற்று குறைவதால் அலட்சியம் கூடாது- சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

புயல், மழை பாதித்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நோய் தடுப்பு பணிகளை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். கரோனா தொற்று குறைவதால் மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது என்று அவர் தெரிவித்தார்.

புயல், மழை பாதித்த பகுதிகளில் நோய் தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்புமருத்துவமனையில் நேற்று நடைபெற்றது. பணிகளை தொடங்கிவைத்து, சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:

புயல், மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 435 நடமாடும் மருத்துவ குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 9,573 முகாம்கள் மூலம் 2,27,082 பேர் பயனடைந்துள்ளனர். அனைவருக்கும் சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர் வழங்க அறிவுறுத்தப்பட்டு, பொது சுகாதாரக் குழுக்கள் மூலம் குடிநீரின் தரம் தினமும் ஆய்வு செய்யப்படுகிறது. இதுவரை 23,952 இடங்களில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பான குடிநீர் வழங்கவும், நோய் தொற்றை தடுக்கவும் சுமார் 1,000 டன் பிளீச்சிங் பவுடர், 3.8 லட்சம் லிட்டர் திரவ குளோரின் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள், முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு கரோனா தொற்று வருவதை தடுக்கும் விதமாக 38,837 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாவட்டந்தோறும் உணவுப் பொருட்களின் தரத்தை உணவுப் பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொற்றுநோய் தடுப்பு பணிகள், மருத்துவ முகாம்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளில் 60 நடமாடும் மருத்துவக் குழுக்கள், 15 குளோரினேஷன் குழுக்கள், 65 கொசு ஒழிப்பு வாகன புகை தெளிப்பான்கள், 76 கரோனா மாதிரி சேகரிப்பு குழுக்கள், 15 கிருமிநாசினி தெளிக்கும் வாகனங்கள், எட்டு 108 ஆம்புலன்ஸ், 1 நடமாடும் உணவு பரிசோதனை குழு உள்ளிட்ட 240 குழுக்கள் ஈடுபடுத்தப்படுகின்றன.

இக்குழுக்கள் ஆங்காங்கே மக்களுக்கு தேவையான மருத்துவ முகாம்கள் நடத்துதல், குளோரினேஷன் கலந்து பாதுகாப்பான குடிநீர் வழங்குதலை உறுதிப்படுத்துதல், கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ளுதல், கரோனா மாதிரி சேகரிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் ஆகிய பணிகளில் ஈடுபட உள்ளனர். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைவாக உள்ளது. மழை, பண்டிகை, மக்கள் கூட்டத்தை தாண்டிதமிழகத்தில் கரோனா தொற்று குறைந்து வருகிறது. அதேநேரம், கரோனா பாதிப்பு குறைந்து வருவதால் அலட்சியமாக இருக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி இணை ஆணையர் ச.திவ்யதர்ஷினி, பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர்கள் (சிறப்பு அலுவலர்) பா.வடிவேலன், சூ.சித்ரா ஆகியோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT