முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் தி.மு.க. நாடகமாடுகிறது என திண்டுக்கல் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
திண்டுக்கல் அ.தி.மு.க. வேட் பாளர் உதயகுமாரை ஆதரித்து, செவ்வாய்க்கிழமை திண்டுக்கல் லில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசியது:
திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக திமுக-வும், காங்கிரஸும் செயல்பட்டன. கடந்த 17 ஆண்டுகளாக மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் வாய் திறக்கவில்லை. தற்போது, தேர்தல் வந்ததும் நீர்மட்ட அளவை 152 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வலியுறுத்துவோம் என தேர்தல் அறிக்கையில் திமுக தெரிவித்துள்ளது பித்தலாட்டம்.
கடந்த காலத்தில் அ.தி.மு.க. அரசின் முயற்சியால் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையின் முழு நீர்மட்டம் 136 அடிதான் என சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து, அப்போது அதிமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
நடவடிக்கை எடுக்காத திமுக அரசு
அதன்பின், 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பில் இருந்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டுவரை மத்திய அரசிலும் அங்கம் வகித்தது. இந்த காலகட்டத்தில் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக திமுக நினைத்திருந்தால் உயர்த்தி இருக்க வேண்டியதுதானே. ஏன் செய்யவில்லை?
அணை நீர்மட்டத்தை 142 அடியாகக்கூட உயர்த்த திமுக. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
முல்லைப் பெரியாறு அணையில் புதிய அணை கட்ட மத்திய அரசு ஆய்வு மேற்கொண்டது. அணை கட்ட இன்னும் மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என திமுக தலைவர் கருணாநிதி வாதாடினார். பின் மத்திய அரசு அனுமதி வழங்கியது தெரிந்ததும், மத்திய சுற்றுச்சழல் அமைச்சரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்தார். குடும்ப நலன் கருதி, அந்த ஆர்ப்பாட்டத்தை துணிவில்லாமல் கடைசியில் கைவிட்டார்.
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு கேரள போலீஸாருக்கு பதிலாக மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை அமர்த்த அ.தி.மு.க. வலியுறுத்தியது. இதற்கு மத்திய அரசு செவிசாய்க்காமல் வஞ்சித்தது. அதனால், தி.மு.க.வை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்றார்.