வைகை நீர் ராமநாதபுரம் பெரிய கண்மாயை வந்தடைந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டப் பாசனத் துக்காக வைகை அணையில் இருந்து நவ.30-ம் தேதி முதல் டிச.5 வரை 1093.03 மில்லியன் கனஅடி தண்ணீர் படிப்படியாக திறந்து விடப்பட்டது. இந்தத் தண்ணீர் கடந்த 3-ம் தேதி ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பார்த்திபனூர் மதகு அணைக்கு வந்தது. அன்றைய தினம் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எம்எல்ஏக்கள் எம்.மணிகண்டன், என்.சதன்பிரபாகர் ஆகியோர் மலர் தூவி நீரைத் திறந்துவிட்டனர்.
பார்த்திபனூர் மதகு அணை யில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று மாலை பெரிய கண்மாய்க்கு வந்தது. இதனால் ராமநாதபுரம் பெரிய கண்மாய் பாசனப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து வைகை வடிநிலக் கோட்டச் செயற்பொறியாளர் எஸ்.மதன சுதாகரன் கூறியதாவது:
பார்த்திபனூர் மதகு அணை யில் இருந்து வினாடிக்கு 3,000 கனஅடி வீதம் பெரிய கண் மாய் வரை உள்ள பாசனக் கண்மாய்களுக்குத் தண்ணீர் திறந்து விடப்பட்டது. பெரிய கண்மாயின் கொள்ளளவான 7 அடியில் சுமார் 3 அடி வரை தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் பெரிய கண்மாய் பாசன நிலங்களில் விவசாயம் செய்ய முடியும். வைகை நீர் மூலம் மாவட்டத்தில் 67,837 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் என்றார்.