வெள்ள சேதங்களை பார்க்க வரும் மத்தியக்குழு கண்துடைப்பு குழு என்று காவிரி டெல்டா பாசனம் விவசாய சங்க கூட்டமைப்பு தலைவர் காட்டுமன்னார்கோவில் இளங்கீரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று (டிச. 7) வெளியிட்டுள்ள அறிக்கை:
"தமிழகத்தில் கடந்த சில தினங்களாக அதிக மழை பெய்து வருகிறது. இதில், கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, குறிஞ்சிப்பாடி பகுதியில் அதிக மழை பெய்துள்ளது. இதனால் குறுகிய காலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த விவசாய பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி உள்ளது. கடலூர் மாவட்டம் முழுவதும் 2 லட்சம் ஏக்கருக்கு மேல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது.
கடன் வாங்கி விவசாயம் செய்து வரும் விவசாயிகள், விவசாய நிலங்கள் முழுவதும் தண்ணீரில் முழ்கி உள்ளதால் என்ன செய்வது என்று தவித்து வருகின்றனர். மேலும், ஏழு மாவட்டங்களில் கடும் மழை காரணமாக பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியது. தண்ணீரில் மூழ்கிய விவசாய நிலங்களுக்கு சம்பந்தப்பட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் ஆகியோருக்கு இடைக்கால நிவாரணமாக தலா ரூ.5,000 நிவாரண தொகை வழங்க வேண்டும் .
ஒவ்வொரு வருடமும் மழைக்காலத்தின் போது விவசாய விளைநிலங்கள் மூழ்கி விவசாயிகள் பாதிக்கப்படும்போது மத்திய அரசு சார்பில் பல்வேறு துறை சார்ந்த உயரதிகாரிகளின் குழு பாதிக்கப்பட்ட இடங்களை சம்பிரதாயமாக பார்த்து விட்டு செல்கிறது. விவசாயிகள் தாங்கள் பாதிக்கப்பட்டதை எடுத்துச் சொல்லும் போது கவனமாக கேட்பதுபோல் கேட்டுவிட்டு டெல்லிக்குச் சென்று மிகக்குறைந்த அளவிலான நிவாரண தொகையை தமிழகத்திற்கு ஒதுக்குவதை மத்தியக்குழு வாடிக்கையாக செய்து வருகிறது. மத்தியக்குழு கண்துடைப்பு குழு போல செயல்படுகிறது. இது விவசாயிகளுக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது.
மத்தியகுழுவுடன், வெளிமாநில விவசாய சங்க பிரதிநிதிகள், தமிழகத்திலுள்ள விவசாய சங்க பிரதிநிதிகளையும் இணைத்து பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழக முதல்வர், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து உரிய நிவாரண தொகையை பெற வேண்டும்".
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.