தமிழகத்தை தாக்கிய நிவர் புயல் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யும் மத்திய குழுவினர் பாதிப்புகளை ஆய்வு செய்து உரிய இழப்பீட்டை தமிழகத்திற்கு உடனடியாக பெற்று தர வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (டிச. 06) வெளியிட்ட அறிக்கை:
"நிவர் புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு தமிழகம் வந்துள்ளது. புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள பகுதிகளை நேரடியாக சென்று ஆய்வு செய்ய இருக்கிறார்கள். நிவர் புயலால் 8 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலே வீடுகள், விவசாய நிலங்கள், மரங்கள் மிகவும் சேதமடைந்து இருக்கின்றன. சென்னை புறநகர் பகுதியும் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இதற்கு இடையில் மேலும் புதிதாக புரெவி புயல் ஏற்பட்டதால் தமிழக தென் மாவட்டங்களில் 4 மாவட்டங்கள் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக மழை, காற்று இருந்ததால் நெற்பயிற்கள் நீரில் முழ்கி மிக அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. அதோடு, குடிசை வீடுகளும் மரங்களும் சாலைகளும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, மத்திய குழுவினர் தமிழகத்தில் இரண்டு புயலாலும் பாதித்த அனைத்து மாவட்டங்களையும் பார்வையிட்டு பலதரப்பட்ட சேதங்களையும் ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை கொடுத்து விரைவில் தமிழகத்திற்கு மத்திய நிதியுதவியை உடனடியாக பெற்றுத்தர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்".
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.